லாஸ்ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் செயல்படும் சிஸ்கோ சிஸ்டம்ஸ் இன்க் (CSCO.O) நிறுவனத்தில், அங்கு பணியாற்றும் இந்தியர்களால் சாதியப் பாகுபாடு பார்க்கப்படுகிறது என்று வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
அந்நிறுவத்தில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் பிராமணர்கள் மற்றும் இதர உயர்சாதியினர். இந்நிலையில், அங்கு பணியாற்றும் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் மீது பாகுபாடு காட்டப்பட்டதாக புகார் எழுந்தது.
அமெரிக்காவைப் பொறுத்தவரை, சாதி என்ற நுட்பமான இந்துத்துவக் கொடுமைக்கு எதிரான குறிப்பிட்ட தடுப்புச் சட்டங்கள் கிடையாது என்ற போதிலும், கலிஃபோர்னியாவின் வேலை வாய்ப்பு நலன் மற்றும் வீட்டு வசதி விதிமுறைகளின் அடிப்படையில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சான் ஜோன்ஸ் ஃபெடரல் நீதிமன்றத்தில் இந்த வழக்குப் பதியப்பட்டுள்ளது. அதேசமயம், பாதிக்கப்பட்டவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. அதேசமயம், அவர் கடந்த 2015ம் ஆண்டு முதல் சிஸ்கோ நிறுவனத்தின் சான் ஜோஸ் தலைமையகத்தில் முதன்மைப் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.
அவர் இந்திய தலித் சமூத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவர் மீது சில குறிப்பிட்ட உயர்சாதி அதிகாரிகள், சாதியப் பாகுபாடு காட்டினார்கள் என்று வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்து மதம் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கு சாதி என்ற நச்சும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.