”இந்தியாவில் உள்ள அனைவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும்” – மத்திய அமைச்சர்

பிரதமர் மோடி அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி இந்திய மக்கள் அனைவரின் வங்கி கணக்கிலும் ரூ.15லட்சம் வந்து சேரும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

lacs

2014ம் ஆண்டு பாஜக சார்பில் பிரதமர் பதவிக்கு போட்டியிட்ட போது நரேந்திர மோடி தேர்தல் வாக்குறுதி ஒன்றை அளித்தார். அதாவது கருப்பு பணத்தை ஒழித்து, இந்திய மக்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்பதே அந்த வாக்குறுதி. ஆனால் மோடி பிரதமராக பதவி ஏற்று 4 ஆண்டுகள் கடந்த நிலையில் வாக்குறுதி வாக்குறுதியாகவே உள்ளது.

இந்நிலையில், இந்திய குடியரசு கட்சித்தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே, மாகாராஷ்ட்ரா மாநிலம் சங்லி மாவட்டத்தில் உள்ள இஸ்லாம்பூர் பகுதிக்கு படுகொலை செய்யப்பட்ட தனது கட்சி உறுப்பினர் வீட்டிற்கு ஆறுதல் கூற சென்றார். அப்போது செய்தியாளார்களை சந்தித்த ராம்தாஸ் அத்வாலே, ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் கவலை அளிப்பதாக கூறினார்.

மேலும், வரும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை முன்வைத்து பா.ஜ.க. கூட்டணி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும் என்றார். அதுமட்டுமின்றி, ” கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது இந்தியர்கள் அனைவரின் வங்கி கணக்குகளிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என தெரிவித்திருந்தார்.

ஆனால், மத்திய (ரிசர்வ்) வங்கியில் அவ்வளவு தொகை இல்லாததால் தான் அந்த வாக்குறுதியை நிறைவேற்றப்படவில்லை. விரைவில் ரூ.15 லட்சம் அனைவரின் வங்கி கணக்குகளிலும் போடப்படும் என நம்புகிறோம் “ என்று ராம்தஸ் அத்வாலே கூறினார்.

இந்திய குடியரசு கட்சியின் தலைவரான அத்வாலே பாஜக தலைமையிலான தேசிய கூட்டணி அரசின் அமைச்சராக உள்ளார்.