வாஷிங்டன்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் பெர்னி சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

விதி எண் 370 ஐ விலக்கி காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த இந்திய அரசு அம்மாநிலத்தை  இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. இதற்குப் பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்தது காஷ்மீர் தாம் மத்தியஸ்தம் செய்யத் தயாராக உள்ளதாக மீண்டும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். அதை மறுத்த இந்தியப் பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டில் டிரம்பை சந்தித்து நிலைமையை விளக்கினார்.

இந்த மாத இறுதியில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகருக்கு ஐநா சபையின் 74 ஆம் தொடருக்கு மோடி செல்ல உள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளரான  பெர்னி சாண்டர்ஸ் நேற்று ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றினார் அப்போது அவர், “பாதுகாப்பு என்னும் பெயரில் காஷ்மீரை இந்தியா துண்டாடி வருகிறது. நான் காஷ்மீர் வாழ் மக்களுக்கு இந்திய அரசால் நடத்தப்படும் அநீதி மற்றும் தொலைத் தொடர்பு முடக்கத்தால் வருத்தம் அடைந்துள்ளேன்.

இந்த தடையால் பல நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள் கிடைப்பதிலும், சிகிச்சை அளிப்பதிலும் கடும் முடக்கம் ஏற்பட்டுள்ளதாகக் காஷ்மீரைச் சேர்ந்த பல மருத்துவர்கள் கூறிவருகின்றனர். காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசின்  நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியதவைகள் ஆகும். எனவே இதில் அமெரிக்க அரசு தலையிட்டு காஷ்மீர் மக்களின் விருப்பப்படியும் சர்வதேச சட்டப்படியும் அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.” எனப் பேசி உள்ளார்.