டில்லி

ந்தியாவில் 110 நாட்களில் 1 லட்சத்தை அடைந்த கொரோனா பாதிப்பு அதன் பிறகு 39 நாட்களில் 5 லட்சத்தை தாண்டி உள்ளது

இந்தியாவில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகலெடுத்து வருகின்றன.  ஆயினும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது.  நேற்று முன் தினம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியது,  நேற்று ஒரே நாளில் அது 20,132 ஆக உயர்ந்து இந்தியாவில் 5,29,577 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்தியாவில் கடந்த மே மாதம் 19 ஆம் தேதி அன்று கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை எட்டியது.  அதன் பிறகு 15 நாட்கள் கழித்து ஜூன் 3ஆம் தேதி அன்று அது 2 லட்சம் ஆனது.  அதன் பிறகு மேலும் 10 நாட்களில் 3 லட்சத்தை அடைந்த கொரோனா பாதிப்பு மேலும் 8 நாட்களில் 4 லட்சத்தை எட்டியது.

தொடர்ந்து 5 நாட்களாகத் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15000 ஐ கடந்து வருகிறது.  இதில் மகாராஷ்டிரா, தமிழகம், டில்லி, குஜராத் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் பாதிப்பு அதிக அளவில் உள்ளன.   இந்த பாதிப்பை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25 முதல் தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அதன் பிறகு அது மீண்டும் மீண்டும் நீட்டிக்கப்பட்டும் பாதிப்பு குறையவில்லை

தற்போது பொருளாதார வீழ்ச்சியினால் நாட்டின் பல பகுதிகளில் அரசு ஊரடங்கு உத்தரவைத் தளர்த்தி உள்ளது.   அதையொட்டி பாதிப்பு அதிகரித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.   கொரோனா பரவுதல் அதிகரிப்புக்கு வைரஸ் உருவாகுதல் அதிகரிப்பதாகச் சொல்லப்பட்டாலும், ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட இடங்களில் மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றாததே முக்கிய காரணம் எனச் சொல்லப்படுகிறது.

கொரோனா பரிசோதனைகள் அதிகரித்து வருவதும் இதற்காக ஒரு காரணம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.   தற்போது பரிசோதனை வசதிகள் அதிகரித்துள்ளதாலும் கட்டணங்கள் குறைந்துள்ளதாலும் அதிக அளவில் சோதனை நடந்து பாதிப்பு எண்ணிக்கை தெரிய வந்துள்ளதாகவும் அவர்கள் சொல்கின்றனர்.

தற்போது பரிசோதனை எண்ணிக்கைகள் அதிகரிப்பதைப் போலவே பாதிப்பு உறுதி ஆகும் சதவிகிதமும் அதிகரிப்பது குறிப்பிடத்தக்கதாகும். இதைப் போல் குணமடைவோர் சதவிகிதம் அதிகரிப்பதும், உயிர் இழந்தோர் சதவிகிதம் மற்ற நாடுகளை விடக் குறைவாக இருப்பதும் மகிழ்வுக்குரியது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கையில் 4 ஆம் இடத்தில் உள்ள இந்தியா மரண எண்ணிக்கையில் 8 ஆம் இடத்தில் உள்ளது என ஒரு ஆய்வு தெரிவிப்பது குறிப்பிடத்தக்கதாகும்