டில்லி

நாடெங்கும் கொரோனா ஆய்வகங்கள் எண்ணிக்கை 2000ஐ தாண்டியதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

உலகெங்கும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.  கொரோனா பாதிப்பில் சர்வதேச அளவில் 3ஆம் இடத்தில் உள்ள இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.   இதையொட்டி கொரோனா பரிசோதனை தீவிரமாகி உள்ளது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று டில்லியில் நடந்த 40ஆவது முதியோர் பாதுகாப்பு தின விழாவில் கலந்து கொண்டார்.  இந்த நிகழ்வில் அவர் சிறப்புரை ஆற்றினார்.  அவர் தனது உரையில், “இந்தியாவில் இருந்து கொரோனா சிகிச்சைக்காக ஹைட்ராக்ஸிகுளோரோகுவின் மருந்து 150 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை 7.5 கோடி பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி  போடப்பட்டுள்ளது.  அத்துடன் வெளிநாடுகளுக்கு 6.5 கோடி டோஸ் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளன.  இந்தியாவில் முன்பு ஒரே ஒரு கொரோனா பரிசோதனை ஆய்வகம் மட்டுமே இருந்த நிலையில் தற்போது ஆய்வகங்கள் எண்ணிக்கை 2000க்கும் அதிகமாகி உள்ளன.” எனத் தெரிவித்துள்ளார்.