சீனாவுக்கு இந்தியப் பருத்தி ஏற்றுமதி 5 மடங்கு அதிகரிப்பு

 

பீஜிங்

மெரிக்க ஏற்றுமதி வரி அதிகரிப்பால் இந்தியாவிடம் இருந்து அதிக அளவில் சீனா பருத்தி வாங்குகிறது.

அமெரிக்க நாடு உலகின் அதிக அளவு பருத்தி ஏற்றுமதி செய்யும் நாடாக உள்ளது.    சீனாவின் மிகப்பெரிய பருத்தி ஏற்றுமதியாளராக அமெரிக்கா இருக்கிறது.    அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே தற்போது வர்த்தக யுத்தம் நடக்கிறது.   சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% இறக்குமதி வரியை அமெரிக்கா விதித்துள்ளது.   அதைத் தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சீனா 25% வரி விதிக்கப் போவதாக அறிவித்தது.

இதனால் சீன இறக்குமதியாளர்கள் அமெரிக்காவுக்கு பதிலாக இந்தியாவில் இருந்து அதிக அளவில் பருத்தி இறக்குமதி செய்ய ஆரம்பித்துள்ளனர்.   அதனால் இந்திய வர்த்தகர்களும் சீன வர்த்தகர்களும் தற்போது 5 லட்சம் பேல் பருத்தி வர்த்தகத்துக்கு ஒப்பந்தம் இட்டுள்ளனர்.  இதன் எடை 85000 டன்கள் ஆகும்.   இது வழக்கத்தை விட ஐந்து மடங்கு அதிகமாகும்.

உலகெங்கும் சீனப் ஆடைகளுக்கு வரவேற்பு உள்ளதால் மூலப் பொருளான பருத்தியின் தேவை அந்நாட்டு உற்பத்தியை விட பல மடங்கு உள்ளது.    அதே நேரத்தில் சீனப் பொருட்கள் விலை மலிவாக உள்ளதால் அதிக விலை கொடுத்து பருத்தியை அமெரிக்காவிடம் இருந்து வாங்க முடியாத நிலை உள்ளது.   அதனால் சீன வர்த்தகர்கள் மற்ற நாடுகளிடம் இருந்து பருத்தி இறக்குமதி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சீன இறக்குமதியாளர் ஒருவர், “அமெரிக்க பருத்தியை விட  இந்தியப் பருத்தி நல்ல தரத்துடன் உள்ளது.  அத்துடன் சமீப காலமாக இந்திய ரூபாய் மதிப்பு குறைந்து வருவதால் விலை மிகவும் மலிவாக உள்ளது.   அதே நேரத்தில் உபரியாக உள்ள பருத்தியை மட்டுமே இந்தியா ஏற்றுமதி செய்கிறது.   அதனால் விளைச்சல் அதிகமாகி உபரி பருத்தி அதிகமானால் சீனாவில் இந்தியப் பருத்தி பெருமளவில் இறக்குமதி செய்யப்படும்” என தெரிவித்துள்ளார்.