சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரி மீண்டும் தேர்வு!

நியூயார்க்:

சர்வதேச கோர்ட்டின் நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த தல்வீர் பண்டாரி மீண்டும் தேந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த பதவியில் அவர் மேலும் 9 ஆண்டுகள் பணியாற்றுவார்.

நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் சர்வதேச கோர்ட்டு செயல்பட்டு வருகிறது. இந்த கோர்ட்டில்  3 ஆண்டு களுக்கு ஒருமுறை 5 நீதிபதிகள் சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ஐ.நா. பொதுசபையில் உறுப்பினராக உள்ள 193  நாடுகளும் ஐ.நா. பாதுகாப்பு சபையில் உள்ள 15 உறுப்பு நாடுகளும் வாக்களித்து இந்த நீதிபதிகளை தேர்வு செய்வார்கள்.

அதன்படி இந்த ஆண்டு 5 நீதிபதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. அப்போது,  பிரேசில், லெபனான், பிரான்ஸ், சோமாலியா நாடுகளை சேர்ந்த 4 நீதிபதிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

மீதமுள்ள ஒரு நீதிபதி இடத்துக்கு போட்டி நடைபெற்றது. இந்தியா சார்பாக ஏற்கனவே சர்வதேச நீதி மன்றத்தில் பணியாற்றி வந்த, தல்வீர் பண்டாரியை  மீண்டும் வேட்பாளராக களமிறக்கியது. அவரை எதிர்த்து, பிரிட்டனைச் சேர்ந்த கிரீன் உட்டும்க களமிறக்கப்பட்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த தேர்தலில் இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரி வெற்றிபெற்றார்.

அதைத்தொடர்ந்து,  பிரிட்டன் தனது வேட்பாளரை கடைசி நேரத்தில் திரும்பப் பெற்றுக்கொண்டது. மேற்கொண்டு தேர்தல் நடத்துவதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மற்றும் பொதுசபையின் மதிப்புமிக்க நேரத்தை எடுத்துக்கொள்வது தவறு என்ற முடிவுக்கு வந்திருப்பதாக பிரிட்டன் தூதர் மேத்யூ ரைகிராப்ட் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பிரிட்டன் தனது வேட்பாளரை திரும்ப பெற்றதால் இந்தியாவின் தல்வீர் பண்டாரி வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் 9 ஆண்டுகள் இப்பதவியில் நீடிப்பார்.