விரைவில் சோதனை ஓட்டத்தில் சென்னையில் தயாரான இஞ்சின் இல்லாத ரெயில்

சென்னை
சென்னை ஐசிஎஃப் இல் தயாரான இந்தியாவின் முதல் இஞ்சின் இல்லாத ரெயில் விரைவில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது.

 

இந்தியாவில் முதல் முதலாக விரைவு ரெயிலான சதாப்தி எக்ஸ்பிரஸ் சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. அந்த ரெயிலுக்கான பெட்டிகள் இறக்குமதி செய்யப்பட்டன. அதை ஒட்டி இந்தியாவிலேயே புதிய வகை ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி சென்னை இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் தொடங்கப்பட்டது.

தற்போது இந்தியாவில் முதல் முறையாக இஞ்சின் இல்லாத ரெயில் பெட்டிகள் சென்னை இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளன.  தோற்றத்தில் புல்லட் ரெயிலை ஒத்திருக்கும் இந்த ரெயில்  குறித்து அந்த தொழிற்சாலையின் பொது மேலாளர் சுதான்ஷு மணி, “தற்போது இஞ்சின் இல்லாமல் செல்லும் பெட்டிகளைக் கொண்ட ஒரு புதிய ரெயில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு டிரெயின் 18 என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதன் விலை ரூ. 100 கோடி ஆகும். இதே போல இன்னொரு ரெயில் தயாரிப்பில் உள்ளது. அந்த ரெயில் மார்ச் மாதம் தயாராகும். அப்போது விலை குறையக் கூடும். அதே போல தயாரிப்பு அதிகரிக்கையில் விலையும் மேலும் குறையும். இந்த ரெயில் ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கும் சதாப்தி ரெயிலுக்கு மாற்றாக அமைய உள்ளது.

சதாப்தி ரெயிலை விட இந்த ரெயில் 10 – 15% அதிக வேகமாக செல்லக்கூடியதாகும்.  இந்த ரெயிலில் சக்தி வாய்ந்த பிரேக்குகள் பொருத்தப்படுள்ளன. இன்னும் ஒரு வாரத்தில் சோதனை ஓட்டத்துக்கு தயாராக உள்ள இந்த ரெயிலில் 16 ஏசி கோச்சுகள் உள்ளன. அவற்றில் இரு கோச்சுகள் எக்சிக்யூடிவ் கோச்சுகள் ஆகும்.

இந்த ரெயில் பெட்டிகள் இந்தியாவில் தயாரிப்பதால் வெளிநாட்டு தொழில்நுட்பத்துக்கான செலவு குறைந்துள்ளது. இல்லையெனில் இதற்கான செலவு ரூ. 170 கோடி ஆகி இருக்கும். அது போலவே வெளிநாட்டில் இந்த ரெயில் வாங்கி இருந்தால் அதற்கு 36 மாதங்கள் ஆகி இருக்கும். ஆனால் இந்த ரெயில் 18 மாதங்களில் உருவாக்கப்பட்டுள்ளது” என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.