உலக பாரா நீச்சல் சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை காஞ்சன்மாலா தங்கம் வென்று சாதனை

மெக்ஸிகோ,

மெக்சிகோ நகரில் நடைபெற்று வரும்  உலக பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை காஞ்சன்மாலா பான்டே தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

மெக்ஸிகோவில் உலக பாரா சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், 200 மீட்டர் மிட்லே நீச்சல் போட்டியின் எஸ்-11 பிரிவில் இந்திய வீராங்கனை காஞ்சன்மாலா பான்டே கலந்து கொண்டார்.

இந்த போட்டியில் அபாரமாக நீந்தி காஞ்சன்மாலா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

இதன் காரணமாக  உலக பாரா சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை காஞ்சன்மாலா பெற்றுள்ளார்.

இதுகுறித்து காஞ்சன் மாலா பான்டே கூறியதாவது,  தான்  உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற வேண்டும் என்ற நோக்கில் கடுமையாக பயிற்சி பெற்றிருந்தேன். மேலும், மெக்ஸிகோவில் நல்ல நிகழ்ச்சியை எதிர்பார்த்தேன். அதுபோல தற்போது எனக்கு  ஒரு பதக்கம் கிடைத்ததுள்ளது.

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் முதலில் வந்து,  தங்க பதக்கம் பெற்றது வியப்புக்குரியது. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதே நேரத்தில், அதை வார்த்தைகளில் எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்று எனக்கு தெரியாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காஞ்சன் மாலா பான்டே,  இந்திய ரிசர்வ் வங்கியில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.