சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில், தனது முதல் இன்னிங்ஸை ரசிகர்களின் பெருத்த எதிர்பார்ப்புடன் துவக்கிய இந்திய அணி, 244 ரன்கள் மட்டுமே எடுத்து, ஆஸ்திரேலியாவை விட 94 ரன்கள் பின்தங்கியது.

துவக்க வீரர்கள் ரோகித்தும், ஷப்மன் கில்லும் ஓரளவு நல்ல துவக்கம் கொடுத்த நிலையில், அதை அப்படியே தொடர்வதற்கு தவறியது இந்திய அணி. புஜாரா மட்டும் மிக நிதானமாக ஆடி 50 ரன்களை அடித்தார்.

கேப்டன் ரஹானே 22 ரன்கள் மட்டுமே அடித்தார். ஓரளவு நன்றாக ஆடிவந்த ரிஷப் பன்ட் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆல்ரவுண்டர் ஜடேஜா 28 ரன்களுடன் கடைசிவரை நாட்அவுட்டாக இருந்தார். ஆனால், அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கத்தான் ஆளில்லை.

இறுதியில், 100.4 ஓவர்கள் ஆடிய இந்திய அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, ஆஸ்திரேலியாவை விட 94 ரன்கள் பின்தங்கியது.

ஆஸ்திரேலியா தரப்பில் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். ஹேசில்வுட்டுக்கு 2 விக்கெட்டுகளும், மிட்செலுக்கு 1 விக்கெட்டும் கிடைத்தன.