ஸ்ரீஹரிகோட்டா:

ந்திய விண்வெளித்துறை மூலம் 2021ம் ஆண்டு  முதன்முதலாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் விண்கலத்தில் ஒரு பெண் விண்வெளி ஆராய்ச்சியாளரும் அனுப்பப்பட வாய்ப்பு இருப்பதாக  இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்து உள்ளார்.

விண்வெளிக்கு ஆட்களை அனுப்பி ஆய்வு முயற்சியில் இந்தியா இறங்கி உள்ளது. இதற்காக ககன்யான் என்ற விண்கலம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த விண்கலம்  3 வீரர்களுடன், எஸ்எல்வி மார்க் -3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா வில் இருந்து 2021ம் ஆண்டு டிசம்பரில் ஏவப்பட திட்டமிட்டு உள்ளது.

இந்த நிலையில், விண்வெளிக்கு செல்லும் 3 வீரர்களில் ஒருவர் பெண் விண்வெளி ஆய்வாளர் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்து உள்ளார்.

விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வைக்கும் திட்டத்தை இந்தியா 2022-ம் ஆண்டுக்குள் நிறை வேற்றும் என கூறப்பட்ட நிலையில், அதற்காக  ரூ.10 ஆயிரம் கோடி  நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டு இருக்கிறது.

விண்வெளிக்கு முதன்முதலாக மனிதர்களை அனுப்பும் திட்டத்தை வெற்றிகரமான செயல்படுத்த இஸ்ரோ  ரஷ்யா, பிரான்சுடன் இந்தியா ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, ககன்யான் மூலம் 16 நிமிட பயணத்தில் மூன்று இந்திய ஆராய்ச்சியாளர்கள் விண்வெளிக்கு அனுப்பப்படு வார்கள் என்றும்  அவர்கள் 5-7 நாட்கள் வரை லோ ஆர்பிட்டில் தங்கி ஆய்வு செய்துவிட்டு, பின்பு பூமிக்குத் திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், மூன்று ஆராய்ச்சியாளர்களில் ஒரு பெண் இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். ஆனால், இதுகுறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறோம்.

விண்வெளி வீரர்களை தேர்வு செய்யும் படலம் இன்னும் தொடங்கவில்லை. வீரர்கள் தேர்வு செய்வதில் நிறைய நெறிமுறைகள் உள்ளன. இந்த திட்டத்தில் பங்கேற்றுள்ள விமானப்படை தான் வீரர்கள் பட்டியலை வழங்கும். அதன்பிறகு தான் தேர்வுப் படலம் தொடங்கும் என்றும் கூறி உள்ளார்.