Random image

இந்து தீவிரவாதம் குறித்து கமல் சர்ச்சை பேச்சு: தமிழிசை, எச்.ராஜா கோபம்

சென்னை:

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்த மதத்தை சேர்ந்த கோட்சே என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தின்போது பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இது இந்து மத தலைவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை மற்றும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

கமல் வாக்குக்காக விஷத்தை பரப்புகிறார் என்று தமிழிசையும்,  முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விஷச்செடி  என்று  எச் ராஜாவும் குற்றம் சாட்டி உள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று  அரவக்குறிச்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து பேசும்போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே.நான் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரன். அந்தக் கொலைக்கு நான் இன்று கேள்வி கேட்க வந்திருக்கிறேன் என்று பேசினார்.

அவரது பேச்சு இந்துக்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கி வரும் நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடுடமத கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தமிழிசை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், வெளியிட்டுள்ள பதிவில்,  காந்தியின் கொலையை தற்போது நினைவுகூர்ந்து அதனை இந்து தீவிரவாதம் என நடிகர் கமல்ஹாசன் கூறுவது கண்டிக்கத்தக்கது. சமீபத்தில் நடந்த இலங்கை குண்டுவெடிப்பு குறித்து கமல்ஹாசன் ஏன் கருத்து சொல்லவில்லை?

அவருடைய திரைப்படம் மத குழுக்களால் தடைபட்ட போது அவர் இந்தியாவை விட்டு வெளி யேறுவதாக எச்சரித்தார். ஆனால், இப்போது தன்னை உண்மையான இந்தியன் என்கிறார். மகாத்மாவின் படுகொலையை கண்டித்து நாடே பதறியது. கொலையாளி தூக்கிலிடப்பட்டார். ஆனால் அதை இந்து தீவிரவாதம் என தேர்தல் பிரச்சாரத்தில் பேசுவது விஷமத்தனமானதும் ஆபத்தானதும் கூட. புதிய அரசியலை முன்னெடுப்பதாகக் கூறும் கமல் பழையதை கையில் எடுப்பது மதவிஷம் பரப்பி வரும் வாக்குக்காகத்தானே? என்று கடுமையாக சாடியுள்ளார்.  தன் வாழ்க்கையில் எப்போதும் ஒழுக்கத்தையே கடைப்பிடித்த காந்தியின் கொள்ளுப்பேரன் தான் என்று கமல் சொல்லிக்கொள்ள எந்த தகுதியும் இல்லாதவர். ஏனெனில் இதுவரை அவர் வாழ்ந்த வாழ்க்கையில் எந்த ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்காதவர் என்பது நாடறிந்த உண்மை!

ஊருக்கு உபதேசிக்க கமலுக்கு என்ன தகுதி? உள்ள என்று கேள்வி எழுப்பியவர், அவரது பேச்சு அரசியல்நடிப்பு என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்து தீவரவாதம் என்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசும் கமல்ஹாசனைக் கண்டிக்கிறோம். பள்ளபட்டியில் சிறுபான்மை மக்கள் நடுவில் நின்றுகொண்டு மத உணர்வுகளைத்தூண்டி கலவரத்தை ஏற்படுத்த நினைக்கும் இவர் மீது தேர்தல் ஆணையம் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழிசை பதிவிட்டுள்ளார்.


அதுபோல பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் பதிவில்,  கமலஹாசனை அடையாளம் காண்போம். பல்லாயிரக்கணக்கான இந்துக்களின் தலைகள் துண்டிக்கப்பட்டு ரயிலில் இந்து உடல்களை ஜின்னா 1947 ஆகஸ்டு 15 அன்றே அனுப்பி வைத்ததும் நவகாளி சம்பவங்களும் இந்த ஜின்னாவின் பேரனுக்கு எப்படி நினைவிருக்கும். முஸ்லிம் ஓட்டுக்காக இப்படியா? வெட்கம்

முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விஷச்செடி மநீம. முஸ்லிம் ஓட்டுக்காக இந்துக்களை இழிவு படுத்தும் செயலைப் பாருங்கள். திருப்புவனம் இராமலிங்கத்தின் படுகொலையை கண்டிக்காத கோழை.

திரு. அநாமதேயம் ( Anonymous one) கமலஹாசன் நான் தூக்கம் இழக்கும் அளவிற்கு பெரிய சக்தி அல்ல. இவரால் 1% வாக்குகள் கூட வாங்க முடியாது. ஆனால் விஸ்வரூபம் படத்திற்கு இவர் பயங்ரவாதிகள் முன் கேவலம் பணத்திற்காக மண்டியிட்டதை மறக்க முடியவில்லை.

இவ்வாறு சாடியுள்ளனர்.