இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக தமிழகத்தை சேர்ந்த சத்தியஸ்ரீ பொறுப்பேற்றார்

சென்னை;

ந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக தமிழகத்தை சேர்ந்த சத்தியஸ்ரீ பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் மதுரை அருகே உள்ள  ராமநாதபுரம் பரமக்குடியை சேர்ந்தவர்.  தமிழ்நாடு புதுச்சேரி  பார் கவுன்சிலில் பதிவு செய்த முதல் திருநங்கை என்ற பெருமையையும் சத்தியஸ்ரீ பெற்றுள்ளார்.

சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களாக திருநங்கைகள் வாழ்ந்து வருகிறார்கள். பெற்றோர்களே அவர்களை ஒதுக்கித் தள்ளும் அவலநிலைக்கு ஆளாகி வருகிறார்கள். இந்த நிலையில் அவர்களில் ஒருசிலர் படித்து முன்னேறி அரசு பதவிகளையும் பெற்று வருகிறார்கள்.

ஏற்கனவே தமிழகத்தில் அரசு பணிகளில் ஒருசில திருநங்கைகள் பணியாற்றி வரும் நிலையில், சமீபத்தில் சப்-இன்ஸ்பெக்டராக  பிரித்திகா யாசினி என்ற திருநங்கை பதவி வகித்து வருகிறார்.  இந்த நிலையில் தற்போது  தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சி லில் சத்தியஸ்ரீ சர்மிளா என்ற 36 வயது திருநங்கை  வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த சத்தியஸ்ரீ ஷர்மிளாவை பெற்றோர் ஒதுக்கியதை தொடர்ந்து, ஊரை விட்டு வெளியேறி சென்னைக்கு வந்தார். அவருக்கு மற்றொரு திருநங்கை ஆதரவு கொடுத்து வந்தார்.

இந்த நிலையில்,  ஏற்கெனவே சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்திருந்த சத்தியஸ்ரீ, வழக்கறிஞராக தனது வாழ்க்கையை தொடர விரும்பினார். அதையடுத்து இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக  பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சத்தியஸ்ரீ ஷர்மிளா  தமது வழக்கறிஞர்  பணியைப் பயன்படுத்தி தனது சமூகத்திற்கு சட்டரீதியான உதவி செய்து அவர்களை முன்னேற்றப்போவதாக தெரிவித்து உள்ளார். தன்னுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளதாக கூறியவர்,   நான் நீதிபதியாக வேண்டும் என மூத்த நீதிபதிகள் வாழ்த்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

எனது திருநங்கை சமூகத்திற்காக சேவை செய்வேன். அனைத்து துறைகளிலும் திருநங்கைகள் முன்னேறும் காலம் இது. இந்திய அளவில் முதல் திருநங்கை வழக்கறிஞராக பதிவு செய்துள்ளேன் என்பதில் மகிழ்ச்சி,” என்றும், எனது   உழைப்புக்கு பலரும் உதவியுள்ளனர் என்று கூறிய அவர், ”என் திருநங்கை அம்மா ஷர்மிளா உள்பட  எனது சகோதரி தேவி ,சுதா, ஜெயா  உள்பட திருநங்கை நலனில் அக்கறை உள்ள அமைப்புகள் பலரும் எனக்கு உதவியுள்ளன அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

”முதல் முறையாக திருநங்கை ஒருவர் வழக்கறிஞராக பதிவுசெய்துள்ளார் என்பது பாராட்டப்படவேண்டிய ஒன்று. சமூகத்தில்  திருநங்கை சமூகத்தினர் சந்திக்கும் கொடுமைகள் ஏராளம். தற்போது திருநங்கை ஒருவர் வழக்கறிஞராக உள்ளார் என்பது திருநங்கைகள் பலருக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும். பல திருநங்கைகள் சட்டம் படிக்கமுன்வருவார்கள். சத்தியஸ்ரீ ஒரு தொடக்கப்புள்ளி,” என்று வாழ்த்தினார்  வழக்கறிஞர் திவ்யா.