Random image

இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி மறைவு

சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி மும்பையில் காலமானார். 91 வயது நிரம்பிய அன்னா ராஜம் மல்ஹோத்ரா 7 முதலமைச்சர்களின் கீழ் பணியாற்றியுள்ளார்.

indias

1927ம் ஆண்டு கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் பிறந்தவர் அன்னா ராஜம் ஜார்ஜ். இவர் கோழிக்கோட்டில் பள்ளிப்படிப்பை முடித்த நிலையில், உயர்கல்விக்காக சென்னை வந்தார். அதன்பின்னர் ஆர்பிஐ கவர்னர் ஆர்.என். மல்ஹோத்ராவை திருமணம் செய்துக் கொண்டார்.

மாவட்ட ஆட்சியர் பணியின் நேர்முகத்தேர்வின் போது, நேர்க்காணல் பட்டியலில் இருந்த பெண்கள் சிவில் பணிகளுக்கு பொருந்தாது என்று கூறி அன்னா ராஜத்தை, இந்திய அயலகப் பணியை தேர்ந்தெடுக்குமாறு வலியுறுத்தினர். ஆனால், தனது முடிவில் உறுதியாக இருந்த ராஜம் சிவில் பணியையே தேர்ந்தெடுத்தார். இதையடுத்து, ஓசூரில் துணை ஆட்சியராக பதவி ஏற்ற ராஜம், குதிரையேற்றம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்டவற்றை கற்றுத் தேர்ந்தார். இவர் பணியாற்றிய காலத்தில் கிராமத்திற்குள் புகுந்த 6 யானைகளை சுட்டுக் கொல்ல மறுப்பு தெரிவித்த ராஜம், அவற்றை பாதுகாப்பாக காட்டுக்குள் விரட்டியடித்தார்.

1951-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான ராஜம், மெட்ராஸ் மாநிலத்தில் முதல்வர் ராஜாஜியின் கீழ் பணிபுரிந்தவர். 7 முதல்வர்களின் கீழ் பணியாற்றியுள்ள ராஜம், முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தியின் கீழ் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, 2012-ல் ‘தி இந்து’வுக்குப் பேட்டியளித்த ராஜம், சென்னை பணி அனுபவம் குறித்து நினைவு கூர்ந்தார். அப்போது பேசிய அவர், ” பணிக்கு வந்த புதிதில் முதல்வர் ராஜாஜி பெண்களுக்கு பொதுச் சேவைகள் சரிவராது என்று எண்ணம் கொண்டிருந்தார்.

என்னால் சட்டம் – ஒழுங்கு நிலையைக் கையாள முடியாது என்றும் ராஜாஜி கூறினார். என்னை நிரூபிக்க ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று அவரிடமே வாதாடினேன். என்னுடைய பணியைப் பார்த்த அவர், பின்னாளில் மக்கள் சூழ்ந்த பொதுக்கூட்டம் ஒன்றில் என்னை முற்போக்கான பெண்ணுக்கான எடுத்துக்காட்டு என்று புகழ்ந்தார் “ என மெய்சிலிர்க்க கூறினார்.

கிட்டத்தட்ட 91 வயது கடந்த நிலையில் மும்பையில் உள்ள தனது இல்லத்தில் ராஜம் நேற்று உயிரிழந்தார். சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி என்ற பெருமைக்கு சொந்தக்காரராக அன்னா ராஜம் ஜார்ஜ் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.