திருவனந்தபுரம்: இந்தியாவின் முதல் இளம்மேயராக  21வயது மாணவி ஆர்யா ராஜேந்திரான் பதவி ஏற்ற உள்ளார். அவரை ஆளுங்கட்சி தேர்வு செய்துள்ளது.

கேரளா மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் முடவன்முகல் வார்டு கவுன்சிலர் ஆக தேர்வான ஆர்யா ராஜேந்திரன் என்ற 21 வயது மாணவியை மேயர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்வு செய்திருக்கிறது. இதன்மூலம் நாட்டில் இளவயதில் மேயராகும் பெண் எனும் சாதனையை அவர் படைத்துள்ளார்.

கேரள மாநிலத்தின் உள்ளாட்சி அமைப்புகளுக்கானத் தேர்தல் கடந்த 8, 10, 14 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. கேரள உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு உள்ள நிலையில் பெண்களும் போட்டியிட்டு பெருவாரியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

இந்த தேர்தலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்), பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) ஆகியவை தேர்தலை எதிர்கொண்டன. ஒட்டுமொத்தத்தில், மாநிலம் முழுவதும் இடதுசாரி அமைப்புகளே அதிக அளவில் வெற்றி பெற்றன.

இநத் தேர்தலில், முடவன்முகல் வார்டு கவுன்சிலர் பதவிக்கு அந்த பகுதியைச் சேர்ந்த மாணவி போட்டியிட்டார். ஆர்யா ராஜேந்திரன் என்ற  21வயதான அந்த மாணவி திருவனந்தபுரம் நகரில் உள்ள ஆல் செயின்ட்ஸ் கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதவியல் துறையில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், இந்திய மாணவர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினராக இருக்கிறார்.

இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட  காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீகலாவை விட 2872 வாக்குகள் அதிகம் பெற்று  வெற்றி பெற்று வார்டு உறுப்பினராக தேர்வானார். இந்த இளம் மாணவியை திருவனந்தபுரம் மேயராக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்தது. இதன்மூலம் நாட்டில் மிக இளம்வயதில் மாநகராட்சி மேயராகும் சாதனையை ஆர்யா படைத்துள்ளார்.

ஆர்யா ராஜேந்திரன்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிர  ஆர்வம் கொண்டதுடன், மாநிலத்தில் உள்ள   குழந்தைகளுக்கான பாலர் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.