பெங்களூர்: ஒவ்வொரு போட்டி மற்றும் சுற்றுப் பயணத்திலிருந்தும் விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் விராத் கோலியின் பக்குவம் அசாத்தியமானது என்றும், அவரின் இந்த திறன் உலகக்கோப்பை போட்டியில் பெரிய பங்களிப்பை வழங்கும் என்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

மேலும், சச்சின் டெண்டுல்கரின் சத சாதனையை நெருங்கி வரும் விஷயத்திலும் அவர் கோலியைப் புகழ்ந்துள்ளார்.

டிராவிட் கூறியுள்ளதாவது, “விராத் கோலி ஒவ்வொரு விஷயத்திலிருந்தும் ஒன்றை கற்றுக்கொள்பவர். ஒரு சுற்றுப்பயணம் அணிக்கு தோல்வியானதாக கருதப்பட்டாலும், அவருக்கு அது தோல்வியானதாய் இருக்காது. ஏனெனில், அவர் அவற்றிலிருந்து கற்றுக்கொண்டது அதிகமாய் இருக்கும்.

நம்மால் அடைய முடியாது என்று நினைக்கும் இலக்குகளை அவர் தனக்கென நிர்ணயித்துக் கொள்ளும் திறன் உள்ளவர். ஒவ்வொரு முறையும் ஒரு சுற்றுப் பயணத்திற்கு செல்கையில், அவர் புதிய மற்றும் மேம்பட்ட நபராக செல்கிறார்.

இந்த உலகக்கோப்பை போட்டிகளில், விராத் கோலியைப் போன்று, மகேந்திர சிங் தோனியும் முக்கியப் பங்களிப்பை ஆற்றும் வீரராக இருப்பார்” என்று தெரிவித்துள்ளார்.