புதுடெல்லி:
ந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் புள்ளிவிவரம் நம் அனைவரையும் எச்சரிக்கிறது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று நோயால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட இரண்டு நாடுகளான, அமெரிக்கா மற்றும் இத்தாலியை விட இந்திய பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட சேதம் மிகவும் மோசமானது.
இந்தியாவில் கொரோனா தொற்று இன்னும் அதிகமாகிக் கொண்டே போகிறது. ஆகவே உணவகங்கள், உயர் தொடர்பு சேவைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய வேலைவாய்ப்பு ஆகியவை கொரோனா தொற்றும் அடங்கும் வரை குறைவாகவே இருக்கும். அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய நிவாரண நிதியும் மிகவும் குறைவாகவே இருந்தது என்று ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
நிவாரண நிதியை அரசாங்கம் எவ்வளவு குறைவாக மக்களுக்கு வழங்கியதோ, அவ்வளவும் அரசுக்கு தோல்வியையே தந்துள்ளது. தற்போது அரசாங்கம் இந்த பொருளாதார சேதத்தை குறைத்து மதிப்பிடுகிறது. ஆனால் இதனுடைய பின் விளைவு மிகவும் மோசமாக இருக்கும் என்பதை அரசு உணர வில்லை.
இந்திய பொருளாதாரத்தை ஒரு நோயாளியாக தற்போது நீங்கள் நினைத்துக் கொள்ளுங்கள், ஒரு நோயாளிக்கு நோய்வாய்ப்பட்ட நிலையில் இருக்கும்போது அந்த நோயை எதிர்த்துப் போராடுவதற்காக, தேவையான உணவைத் தரவேண்டும். அந்த உணவு தான் நிவாரணம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நிவாரண நிதி இல்லாமல் வீடுகள் உணவை தவிர்த்து, பிள்ளைகளை பள்ளிக்கூடங்களில் இருந்து நிறுத்தி, வேலைக்கோ அல்லது பிச்சை எடுக்கவோ அனுப்புகின்றனர். கடன் வாங்க தங்கத்தை அடகு வைக்கின்றனர், இஎம்ஐக்களும் குவிந்து கொண்டிருக்கிறது. மேலும் நிவாரணம் இல்லாமல் சிறு குரு நிறுவனங்கள் தத்தளிக்கின்றன.
மக்களுக்கு நிவாரண நிதி கொடுப்பதற்கு அரசாங்கத்தால் செலவிட முடியாது என்று தெரிவிப்பது முட்டாள்தனம். வளங்களை விரிவுபடுத்தி புத்திசாலித்தனமாக அரசு செலவழிக்க வேண்டும் என்று ரகுராம் ராஜன் தெரிவிக்கின்றார்.
அரசாங்கம் முதலில் நிவாரணத்திற்கும், செலவினங்களுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும், அப்படி செய்தால் இந்திய பொருளாதாரம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளது என்று தெரிவித்த ரகுராம் ராஜன் அதற்கான சில வழிமுறைகளை  தெரிவித்துள்ளார்: ஏழைகளுக்கு நிவாரண நிதி வழங்கலாம்.
சிறு குறு நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி தள்ளுபடி செய்யலாம்.
அமேசான், ரிலையன்ஸ் போன்ற பணக்கார தளங்களில் மக்கள் பொருட்களை வாங்குவதை விடுத்து சிறிய வியாபாரிகளிடமிறுந்து பொருட்களை வாங்கலாம்.
நிவாரண நிதியில் பல சீர்திருத்தங்களைச் செய்து ஏழை மக்களுக்கு மட்டும் பணம் செல்லுமாறு அரசு வழிவகுக்க வேண்டும்.
இவ்வாறு செய்தால் இந்திய பொருளாதாரத்தின் நிலைமை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வரும், இந்திய பொருளாதாரம் நம்மை எச்சரிக்கிறது, தற்போது அரசும் மக்களும் சுதாரித்துக் கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.