டெல்லி: இந்தியா சார்பில், ஐ.நா. அமைதிக் குழுவுக்கு, இலவசமாக 2லட்சம் டோஸ்  கொரோனா தடுப்பூசிகள் இன்று (மார்ச் 27ந்தேதி) அனுப்பி வைக்கப்பட இருப்பதாக  என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் திறந்தவெளி விவாதக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், இந்தியா சார்பில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டு, காணொலி மூலம் உரையாற்றினார். அபபோது,  இந்தியா சார்பில் ஐநா அமைதிக்குழுவுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என கடந்த மாதமே (பிப்ரவரி) அறிவித்திருந்தோம். அதன்படி,  இந்தியாவின் பரிசாக 2 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் 27ந்தேதி அனுப்பி வைக்கப்படும் என்றார். மேலும், பகவத் கீதையின் சொற்படி மற்றவர்களுக்கு உதவுவதே எங்களின் நோக்கம், அதை நாங்கள் செய்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

தடுப்பூசிகள்  கத்தார் ஏர்வேஸ் விமானத்தின் மூலம்,  கோபன்ஹேகன் நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு பாதுகாத்து வைக்கப்படுகிறது.

ஐ.நா. சார்பில் உலகம் முழுவதும் 12 அமைதிக்குழுக்கள் பணியாற்றி வருகின்றன. இந்த அமைதிக்குழுவில் இந்தியா உள்பட உலகின் 121 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த அமைதிக் குழுக்களில் மொத்தம்,  85,782 பேர்  உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.