அடிலெய்டு: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடந்துவரும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில், இந்திய ஃபீல்டிங் ஓட்டையையும் மீறி, வெறும் 4 பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு, ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் மிரட்டியுள்ளனர்.

முதல் இன்னிங்ஸில் 47 ரன்களை அடித்த லபுஷேனை, டக்அவுட் ஆக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. பும்ரா வீசிய பந்தில், கீப்பர் விருத்திமான் சஹாவுக்கும், புஜாராவுக்கும் இடையில் வந்த கேட்ச் தவறவிடப்பட்டது. எனவே, இதில் தப்பினார் மார்னஸ்.

பின்னர், அதே மார்னஸ் 12 ரன்களை அடித்திருந்தபோது, பவுண்டரி லைனுக்கு அருகே, அவருக்கான கேட்ச் வாய்ப்பை கோட்டைவிட்டார் பும்ரா.

அதன்பிறகு, அதே மார்னஸ் 21 ரன்களை எடுத்திருந்தபோது, பும்ராவின் பந்தில் கிடைத்த சற்று கடினமான கேட்ச்சை நழுவவிட்டார் பிரித்விஷா.

ஆக, மொத்தமாக 3 முறை தப்பிப் பிழைத்த மார்னஸ், 47 ரன்களை அடித்து, ஆஸ்திரேலிய இன்னிங்ஸில் இரண்டாவது அதிகபட்ச ரன்களை அடித்தவரானார். அவர் முன்னதாகவே அனுப்பி வைக்கப்பட்டிருந்தால், இந்தியாவுக்கு இன்னும், குறைந்தபட்சம் 30 ரன்கள் வரை முன்னிலை கிடைத்திருக்கும்.

ஆஸ்திரேலியா தரப்பில் 6 பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தப்பட்டனர். கோலி ரன்அவுட் ஆகியும், இந்திய அணி 244 ரன்களை வரை எட்டியது. ஆனால், இந்தியா சார்பில், பீல்டிங் மோசமாக இருந்தாலும், வெறும் 4 பவுலர்களே பயன்படுத்தப்பட்டாலும், ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களால் எதையும் செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியெனில், இந்தியப் பந்துவீச்சு, அதன் பேட்டிங்கைவிட வலுவாக உள்ளது என்றே அர்த்தமாகிறது.

ஒருநாள் & டி-20 போட்டிகளிலும், 5 பந்துவீச்சாளர்களை மட்டுமே வைத்து இந்தியா சமாளித்தது. அதேசமயம், டெஸ்ட் என்று வரும்போது, எதற்காக வெறும் 4 பவுலர்களை மட்டுமே வைத்து இந்தியா ரிஸ்க் எடுக்கிறது என்ற கேள்வி எழாமல் இல்லை. 7 பேட்ஸ்மென்களை வைத்தும், பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை. எனவே, 6 பேர் இல்லையென்றாலும், குறைந்தபட்சம் 5 பவுலர்களையாவது இந்திய அணி வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்துக்கள் எழுந்துள்ளன.

இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 9 ரன்களுக்கு துவக்க வீரர் பிரித்விஷா விக்கெட்டை இழந்துள்ளது.