மும்பை: கடந்தாண்டு ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 10000 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம் வென்ற இந்தியாவின் முரளிகுமார் காவிட்டின் வெண்கலம், வெள்ளியாக மாறும் சூழல் நேர்ந்துள்ளது.

அப்போட்டியில், இரண்டாமிடம் பிடித்திருந்த பஹ்ரைன் நாட்டின் ஹாசன் சானி, தடகள பயலாஜிகல் பாஸ்போர்ட்(ABP) முறைகேட்டில் சிக்கியதால், அவருக்கு 4 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆசிய விளையாட்டில் அவர் பெற்ற வெள்ளிப் பதக்கமும் திரும்பப் பெறப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால், முரளி குமாருக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தடகள ஒருங்கிணைப்புப் பிரிவின் ஒழுங்குமுறை கமிட்டி, விதித்துள்ள இந்த தடையுத்தரவை எதிர்த்து, குறிப்பாக, சுவிட்சர்லாந்திலுள்ள விளையாட்டிற்கான நடுவர் நீதிமன்றத்தில் முறையிடலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்தாண்டு நடந்த ஆசிய தடகளத்தின் 10000 மீட்டர் ஓட்டத்தில், ஹாசன் சானி, பந்தய தூரத்தை 28:31.30 நேரத்திலும், இந்தியாவின் முரளி குமார் 28:38.34 நேரத்திலும் கடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.