டில்லி:

ஜெருசலேம் விவகாரத்தில் பாலஸ்தீனத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்தது பெரும் தவறு என்று சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

ஜெருசலேம் விவகாரத்தில் டிரம்ப் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்ற தீர்மானத்தில் ஐ.நா. சபையில் இன்று பொது வாக்கெடுப்பு நடந்தது. இதில் இந்தியா உள்ளிட்ட 128 நாடுகள் அமெரிக்காவிற்கு எதிராக ஓட்டளித்தன. இது தொடர்பாக பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணியன்சாமி டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘‘மேற்கு ஜெருசலேமில் தூதரகத்தை அமைக்கும் அமெரிக்கா, இஸ்ரேல் முடிவுக்கு ஆதரவாக ஓட்டுப்போடாமல் இந்தியா பெரிய தவறை செய்துவிட்டது. தற்போது ஜெருசலேம் ஐ.நா. கட்டுப்பாட்டில் உள்ளது. மேற்கு ஜெருசலேம் இஸ்ரேல் நாட்டிற்கு சொந்தமானது. எனவே தூதரகம் அங்கு அமைக்க வேண்டும்’’ என்றார்.

மற்றொரு பதிவில், ‘‘ஐ.நா.வில் பாலஸ்தீன ஆதரவு தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா ஓட்டளித்தது நாட்டின் நலனுக்கானது. காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் பாலஸ்தீனம் எப்போதும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தது கிடையாது.

இஸ்ரேல் எப்போதும் இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளது. மேற்கு ஜெருசலேம் நகர், இஸ்ரேலின் பகுதி என்பதை ஐ.நா. அங்கிகரித்துள்ளது. எனவே, இந்திய தூதரகத்தை மேற்கு ஜெருசலேம் நகருக்கு மாற்றுவதில் என்ன தவறு?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.