சென்னை: இந்திய செஸ் வீரர்களிலேயே அதிக சாம்பியன் பட்டம் வென்றவர் யார் எனக் கேட்டால், கிட்டத்தட்ட அனைவரும் விஸ்வநாத் ஆனந்த் என்பர். ஆனால், ஜெனிதா அன்டோ என்ற பெயர்தான் சரியான விடை.

ஆனந்த் பெற்ற பட்டங்களின் எண்ணிக்கை 5 மட்டுமே. ஆனால், ‍ஜெனிதா பெற்ற பட்டங்களின் எண்ணிக்கையோ 6. மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச செஸ் சங்கத்தின் உலக தனிநபர் சாம்பியன் பட்டத்தை 6 முறை வென்றுள்ளார் இவர்.

தற்போது, இந்தாண்டு நவம்பர் 26 முதல் டிசம்பர் 4 வரை பிரிட்டனில் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டிக்காக தயாராகி வருகிறார் ஜெனிதா.

தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த 32 வயது ஜெனிதாவுக்கு 3 வயதாக இருக்கும்போதே போலியோ நோய் தாக்கி மாற்றுத்திறனாளியாகும் நிலை ஏற்பட்டது. ஆனால், தனது வெற்றிப் பயணத்திற்கு தனது உடல்நிலையை எப்போதும் இடையூறாக அவர் எண்ணியதேயில்லை.

“ஒவ்வொரு தனிநபரும் தமது லட்சியத்தில் உறுதியாக இருந்து, சம்பந்தப்பட்ட துறையில் சாதிப்பதை உறுதிசெய்ய வேண்டும்” என்கிறார் ஜெனிதா. இவர், விஸ்வநாதன் ஆனந்திடமிருந்தே பாராட்டுகளைப் பெற்றுள்ளார். ஜெனிதாவின் வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் உத்வேகம்அளிக்கக்கூடியது என்று பாராட்டு தெரிவித்துள்ளார் ஆனந்த்.