புதுடெல்லி: திட்டமிடப்படாத தொடர் ஊரடங்கால், இந்தியாவின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை மாபெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது என்று சர்வே ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

அகில இந்திய உற்பத்தியாளர் சங்கம், இதர 9 தொழில்துறை அமைப்புகளுடன் இணைந்து இந்த சர்வேயை நடத்தியது. கடந்த மே 24 முதல் 30 வரை ஆன்லைன் முறையில் நடத்தப்பட்ட இந்த சர்வேயில், மொத்தம் 46525 பதில்கள் பெறப்பட்டன.

இந்த சர்வேயின்படி, 35% சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், 37% சுயதொழில் புரிவோர் ஆகியோர், திரும்ப மீள முடியாத வகையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளனர். அதாவது, அவர்கள் தங்களின் தொழிலை ஊற்றி மூட வேண்டிய நிலையில் உள்ளனர். இதன்மூலம், அவர்களின் எதிர்கால வாழ்க்கை பெரியளவில் கேள்விக்குறியாகியுள்ளது.

இதுதவிர, 32% சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள், தங்களின் பழைய நிலையை அடைய, குறைந்தபட்சம் இன்னும் 6 மாதங்கள் வரை ஆகும் என்று சர்வேயில் பதிலளித்துள்ளனர்.

இந்த சர்வேயில் கலந்துகொண்டு பதிலளித்தவர்களில், வெறும் 12% பேர் மட்டுமே, தங்களின் தொழில் அடுத்த 3 மாதங்களில் பழைய நிலைக்கு திரும்பிவிடும் என்று பதிலளித்துள்ளனர். கார்ப்பரேட் நிலைகளில் மட்டுமே அதிக தன்னம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.