விசாகப்பட்டணம்: இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டில் இந்திய அணி ஒரு குறிப்பிட்ட உத்தியைப் பயன்படுத்தி வென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நான்காம் நாள் ஆட்டம் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. விரைவாக ஆடி அதிக ரன்களை சேர்த்து, தென்னாப்பிரிக்காவுக்கு சவாலான இலக்கை நிர்ணயிக்க விரும்பிய இந்திய அணி அதற்கேற்றாற்போல் ஆடியது.

அதன்படி, தென்னாப்பிரிக்காவுக்கு 395 ரன்களை இலக்காக நிர்ணயித்து, நான்காம் நாளின் இறுதியிலேயே தென்னாப்பிரிக்காவை இரண்டாவது இன்னிங்ஸை தொடங்க அழைத்தது.

ஓவர்கள் குறைவாக இருந்ததால், நான்காம் நாள் முடிவில் இந்திய அணியால் ஒரு விக்கெட் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆனால், தென்னாப்பிரிக்க அணி இதுபோன்ற இக்கட்டான நிலையில் திடமாக செயல்படும் என்பதால், கடைசி நாளில் வேறொரு உத்தியை கடைப்பிடிக்க முடிவு செய்ததாம் இந்திய அணி.

கடைசி நாளில் ஆடுகளம் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்காவிட்டால், அனைத்துப் பந்துகளையும் ஸ்டம்புகளை நோக்கி வீசி, தென்னாப்பிரிக்க பேட்ஸ்மென்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்து விக்கெட்டுகளை எடுப்பதுதான் அந்த உத்தி.

அந்த உத்தி இந்திய அணி எதிர்பார்த்ததைப்போல் நன்றாகவே வேலை செய்தது. கிடைத்த 10 விக்கெட்டுகளில் 5 பெளல்டுகள் மற்றும் 3 எல்பிடபிள்யூ அவுட்டுகள். 2 மட்டுமே கேட்ச். அந்த இரண்டும்கூட ஸ்டம்புகளை நோக்கி நேராக வீசப்பட்ட பந்துகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.