Random image

ஸ்மிருதி ராணியால் தூர்தர்ஷனுக்கு ரூ.70 கோடி வருவாய் இழப்பு

டில்லி:
மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியின் முடிவால் தூர்தர்ஷனுக்கு ரூ.70 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சராக இருந்தவர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர். இவரது பதவி காலத்தில் தூர்தர்ஷனுக்கு வருவாய் ஈட்டி தரும் வகையில் டிடிஹெச் விநியோக சேவைக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு வெற்றிகரமாக அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இவரை தொடர்ந்து அந்த பதவிக்கு வந்த ஸ்மிருதி ராணி இந்த திட்டத்துக்கு மூடுவிழா நடத்தி விட்டார்.

2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்மிருதி ராணி இந்த துறையின் அமைச்சராக பதவி ஏற்றார். அப்போது முதல் டிடிஹெச் சேவையை நிறுத்தியதால் தூர்தர்ஷனுக்கு இது வரை ரூ. 70 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அமைச்சரின் இந்த முடிவால் ஏற்கனவே தூர்தர்ஷன் டிடிஹெச் சேவையை பெற்றிருந்தவர்ளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அவர்கள் தொடர்ந்து சேவையை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் மூத்த அதிகாரிகள் கூறுகையில்,‘‘டிடிஹெச் சேவை அடுத்த 2 வாரத்தில் மீண்டும் தொடங்கப்படும். அதிகாரிகள் குழு மட்டத்தில் இது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும்’’என்றார்.

‘‘தூர்தர்ஷன் டிடிஹெச் சேவையில் இதர தனியார் சேனல்களும் இடம்பெறுவதால் தனது சொந்த சேனல்களுக்கு தேவையில்லாத போட்டி ஏற்படுகிறது. இதனால் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறையும். இதன் காரணமாக தான் தூர்தர்ஷன் டிடிஹெச் சேவையை முடக்கப்பட்டது’’ என்று அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.