டில்லி:

நாட்டின் பொதுத் துறை வங்கிகளின் செயல்படாத சொத்துக்களின் மதிப்பு கடந்த செப்டம்பரில் ரூ. 8.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

வங்கிகளின் கடன் பெற்ற நிறுவனமோ அல்லது தனி நபரோ அதை திருப்பி செலுத்தாத நிலையில் அது வராக்கடனாக இருக்கும். இந்த நிலை குறிப்பிட்ட காலம் வரை நீடித்தால் இது செயல்படாத சொத்துக்களாக மாற்றம் செய்யப்படும்.

இது தொடர்பாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சிவ் பிரதாப் சுக்லா லோக்சபாவில் எழுத்துப்பூர்வ அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார். அதில், ‘‘ இந்த நிதியாண்டின் செப்டம்பர் 30ம் தேதி வரையிலான முதல் அரையாண்டு முடிவுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

அதில் கடந்த மார்ச் 31ம் தேதி அன்று இருந்த பொதுத் துறை வங்கிகளின் செயல்படாத சொத்துக்களின் மதிப்பு 9.5 சதவீதம் உயர்த்து ரூ.8.5 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது’’ என்றார்.

வங்கி திவால் சட்டம் மூலம் கடன் நிலுவை வைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் ரிசர்வ் வங்கி அறிவுரை வழங்கியுள்ளது. ரூ. 5 ஆயிரம் கோடிக்கு அதிகமான நிலுவை உள்ள 12 கணக்குகள் மீது இந்த நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

இந்த 12 நிறுவனங்களும் மொத்த செயல்படாத சொத்துக்களின் மதிப்பில் 25 சதவீததை கொண்டுள்ளது. அடுத்த ஆறு மாதத்தில் மேலும் இது போல பல கணக்குகளை அடையாளம் காணவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.