டில்லி:

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட குட்டி விமானம் ‘சரஸ்’ விரைவில் சிறிய நகரங்களுக்கு இடையே பயணிகள் போக்குவரத்துக்கு பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’வில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘‘கடந்த 70 ஆண்டுகளில் விமான உற்பத்தியில் இந்தியா தீவிரம் காட்டியது இல்லை. 1999ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது முதன் முதலாக பல்முணை திறன் கொண்ட இலக ரக விமானம் தயாரிக்க தேசிய வின்வெளி ஆய்வு (என்ஏஎல்) கூடத்துக்கு அனுமதி கிடைத்தது.

அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி குழுவுடன் (சிஎஸ்ஐஆர்) இணைந்து எவ்வித முன் அனுபவமும் இன்றி உருவாக்கப்பட்ட இந்த விமானம் 2004ம் ஆண்டு மே மாதம் வானத்தில் பறந்தது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமான தான் இந்த ‘சரஸ்’.

இதை உருவாக்க என்ஏஎல் பல கட்டங்களில் சிரமங்களை எதிர்கொண்டது. மேம்படுத்தப்பட்ட சரஸ் விமானம் 2009ம் ஆண்டு விபத்தில் சிக்கியது. இதற்கு அதன் தயாரிப்பு முறையில் எவ்வித காரணங்களும் இல்லை. நான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சராக பதவி ஏற்றவுடன் என்ஏஎல் தொழில்நுட்ப வல்லுனர்களை சந்தித்தேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த கட்டுரையில், ‘‘ விஞ்ஞாணிகளிடம் நம்பிக்கை இழப்பு ஏற்பட்டிருப்பதை உணர முடிந்தது. அறிவியல் என்பது கணிக்க முடியாத விஷயத்தை நிலை நிறுத்தும் ஒரு கலையாகும். பல தோல்விகளுக்கு பின்னர் தான் வெற்றியை அடைய முடியும். அதை நிறுத்தினால் நாம் எதையும் கண்டுபிடிக்க முடியாது. அதனால் என்ஏஎல் மற்றும் விமான தயாரிப்பு, வடிமைப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்க அரசை சம்மதிக்க செய்தேன்.

இதையடுத்து 40 இளைஞர்கள், விஞ்ஞாணிகள் கொண்ட குழு விமான தயாரிப்பின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றினர். 14 மாதத்தில் மேம்படுத்தப்பட்ட சரஸ் கடந்த ஜனவரி 24ம் தேதி வானத்தில் பறந்தது. மீண்டும் பிப்ரவரி 21ம் தேதி பறந்தது. 2022ம் ஆண்டில் சரஸ் தனது பயணத்தை முதன்முதலாக இந்திய விமானப் படையில் தொடங்கும். பின்னர் பயணிகள் போக்குவரத்துக்கு அறிமுகம் செய்யப்படும்.

சரஸ் எம்கே2 என்ற இந்த விமானம் மணிக்கு 500 கி.மீ., வேகத்தில் செல்லும். இதன் அடக்க விலை ரூ.40 முதல் ரூ.45 கோடியாகும். இதை இறக்குமதி செய்தால் ரூ. 60 முதல் ரூ. 70 கோடி வரை செலவாகும். உலகில் உள்ளூர் மற்றும் வெளிநாடு விமான போக்குவரத்து வளம் அதிகம் உள்ள முதல் 3 நாடுகளில் இ ந்தியா உள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு துருவங்களில் ஏற்ற புவியியல் இடம் உள்ளது. 30 கோடி நடுத்தர மக்கள் மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரம் ஆகியவை இந்தியாவில் உள்ள’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

‘‘பயணிகள் எண்ணிக்கையில் இந்தியா 10வது இடத்தில் உள்ளது. இது போன்று பல சிறப்பு அம்சங்கள் இருந்தும் இந்திய விமான போக்குவரத்து துறை அதற்குறிய நிலையை எட்டவில்லை. விமானங்களின் தேவை, விமான போக்குவரத்து சேவை தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு வசதி போன்றவற்றில் விரைந்து வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஊரக, 2 மற்றும் 3ம் நகரங்களுக்கு 19 இருக்கைகள் கொண்ட சரஸ் போன்ற விமானங்களின் தேவை அதிகம் உள்ளது. இதனால் அடுத்த 10 ஆண்டுகளில் 120 முதல் 160 சிறிய ரக விமானங்களுக்க தேவை இருக்கும். எல்லா விதமான பிரச்னைகளுக்கு வெளிநாடுகளை சார்ந்து இருக்கும் மனநிலையை போக்க வேண்டும்.

நமது தேசிய பிரச்னைகளுக்கு தீர்வு காண வல்லுனர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் நம் நாட்டில் திறன் மிக்கவர்கள் உள்ளனர். விஞ்ஞாணிகளுக்கு நாம் தேவையான வாய்ப்புகளை அளித்து அவர்களை ஊக்குவிக்கவில்லை. ஒரு அனுமானம் கூட அதன் வாய்ப்புகளை அறியாமல் விட்டுவிடக் கூடாது’’ என்று ஹர்ஷ வர்தன் எழுதியுள்ளார்.