Random image

தன்பாலின உறவு குற்றமல்ல!: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ன்பாலின உறவு குற்றமல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் 377 ஆவது பிரிவு (தன்பாலினச்சேர்க்கை குற்றம்) என்பது முதன் முதலில் 1860 ஆம் வருடம்  மெக்காலே பிரபுவினால் கொண்டுவரப்பட்டது. அக்காலகட்டத்தில் பிரிட்டனில் தன்பாலின சேர்க்கை குற்றம் என்ற கருத்து நிலவியது. அதன் பிரதிபலிப்பாக இந்தியாவிலும் சட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னரும், இந்தச் சட்டம் இந்தியக் குடியரசின் சட்டங்களில் தொடர்ந்த்து. ஆனாலும்  இதுவரை இந்தியாவில் இச்சட்டத்தின் கீழ் யாரும் தண்டிக்கப்படவில்லை. ஆனால், தன்பாலின சேர்க்கையாளர்களும், திருநங்கைகளும் இச்சட்டத்தினால் தாங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதா கருதுகின்றனர்.

தன்பாலின உறவு குற்றம் என்கிற சட்டப்பிரிவு  1967ஆம் ஆண்டு பிரிட்டனில்   திரும்பப் பெறப்பட்டது.  மேலும், இருபதாம் நூற்றாண்டின் இறுதிக்குள் பெரும்பாலான மேலை நாடுகளில் தன்பாலின சேர்க்கைக்கு எதிரான சட்டங்கள் திரும்பப்பெறப்பட்டன.

இதைத் தொடர்ந்து இந்தியாவிலும் தன்பாலின உறவை குற்றமெனக்கூறும் 377ஆவது பிரிவை விலக்கிக் கொள்ள வேண்டும் என்கிற குரல் ஒலிக்க ஆரம்பித்தது.

2001 ஆம் வருடம் நாஸ் என்ற தனியார் அறக்கட்டளை சார்பில் டில்லி உயர்நீதிமன்றத்தில்  இது குறித்து பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை அடிப்படையில் கடந்த 2009ஆம் ஆண்டு ஜுலை 14ஆம் தேதி டில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் அஜீத் பிரகாஷ் ஷா மற்றும் முரளீதர் ஆகியோர் கொண்ட அமர்வு, தன்பாலின சேர்க்கை குற்றச்செயல் அல்ல தீர்ப்பளித்தது. சட்டத்தின் 377ஆவது பிரிவை திருத்தவும் நாடாளுமன்றத்திற்கு நீதிபதிகள் பரிந்துரை செய்தனர்.

இந்த தீர்ப்பு தன்பாலின சேர்க்கையாளர்கள், திருநங்கைகளின் நல உரிமை அமைப்புகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனாலும் மதரீதியான அமைப்புகள் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

டில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடுகள் செய்யப்பட்டன. 2013ஆம் வருடம் டிசம்பர் 11ஆம் தேதி உச்சநீதிமன்றம் தன்பாலினச் சேர்க்கை குற்றச்செயல் என தீர்ப்பளித்தது.   மேலும், இது தொடர்பான சட்டத்தை திருத்துவதும், திரும்பப்பெறுவதும் இந்திய அரசின் பொறுப்பு என்றும், நீதித்துறையின் பொறுப்பல்ல என்றும் அறிவித்தது. இரு நீதிபதிகள் கொண்ட அமர்வினால் அளிக்கப்பட்ட இத்தீர்ப்பினை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த உச்சநீதிமன்ற அப்போதைய தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர் தலைமையிலான அமர்வு, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்விற்கு வழக்கை மாற்றம் செய்தது. தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில், கடந்த ஜூலை 17ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இந்நிலையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய 5 பேர் கொண்ட அமர்வு இந்த வழக்கில் இன்று தீர்ப்ளித்துள்ளது.

அதில் தன்பாலின உறவு குற்றமல்ல என தெரிவித்துள்ளது. அத்துடன் தன்பாலின உறவைத் தடை செய்யும் சட்டம் 377ஐ ரத்து செய்தது. மற்றவர்களுக்கு உள்ள உணர்வு மற்றும் உரிமை ஓரினச்சேர்க்கை சமூகத்தினருக்கும் உள்ளது என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.