டெல்லி: இந்தியாவில் மித்ரன் செயலி 5 மில்லியன் வீடியோ பகிர்வுகளை பெற்று ஆச்சரியப்பட வைத்துள்ளது.
கொரோனா வைரஸ் காலத்தில் யுடியுப் மற்றும் டிக்டாக் செயலிகள் தான் அதிக பயன்பாடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதை முறியடிக்கும் விதமாக மித்ரன் செயலி பெரிதும் கவர்ந்திருக்கிறது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கூகுள் பிளே ஸ்டோரில் 2ம் இடத்தை பெற்று இருக்கிறது. இதுவரை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து 5 மில்லியனுக்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ பகிர்வு பயன்பாடானது சராசரியாக ஒரு நாளைக்கு 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவிறக்கங்களைப் பெற்று வருவதாக மொபைல் மார்க்கெட்டிங் மற்றும் தரவு பகுப்பாய்வு நிறுவனத்தின் தீபக் மடாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த செயலியானது பிரபலம் அடைய அதன் பெயரும் ஒரு காரணம் ஆகும். பிரதமர் மோடி தமது உரையில் பல முறை குறிப்பிடும் வார்த்தை தான் மித்ரோ (தமிழில் நண்பர்களே என்று பொருள்). ஐ.ஐ.டி ரூர்க்கி மாணவர் ஒருவர் இந்த மித்ரன் பயன்பாட்டை உருவாக்கி டிக்டாக்கை போலவே கொண்டு வந்துள்ளார்.
வீடியோக்களை உருவாக்க, சேர்க்க மற்றும் பகிர எளிதான பயனராக இது இருக்கிறது. 2019ம் ஆண்டில், இந்தியர்கள் 5.5 பில்லியன் மணிநேரங்களுக்கு மேல் குறுகிய வீடியோ பகிர்வு பயன்பாட்டிற்காக மக்கள் செலவிட்டனர். இது 2018 ல் செலவிடப்பட்ட 900 மணிநேரங்களை விட ஆறு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.