இந்திய அணியின் இலங்கை சுற்றுப்பயணம் என்னவாகும்?

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி இலங்கை சுற்றுப்பயணம் செல்வது சந்தேகம்தான் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வரும் ஜூலை மாதம், இந்திய அணியின் இலங்கைப் பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. அங்கு, இந்திய அணி டி-20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்பதாக இருந்தது.

ஆனால், தற்போது கொரோனா பரவல் அனைத்தையும் புரட்டிப் போட்டுள்ளது. இந்திய அணியை எப்படியாவது இலங்கைக்கு வரவழைத்துவிட வேண்டுமென இலங்கை கிரிக்கெட் வாரியம் குட்டிக்கரணமே போட்டுப் பார்க்கிறது.

எவ்விதக் கட்டுப்பாடுகளுக்கும் தயார் என்றும் கொடியசைக்கிறது. ஆனால், இந்திய தரப்பிலிருந்துதான் இன்னும் எவ்வித உத்தரவாதமும் தரப்படவில்லை. வீரர்கள் பலரும் பல்வேறு இடங்களில் இருக்கின்றன. நாடு சிவப்பு மற்றும் பச்சை மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

எனவே, கடுமையான போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இந்நிலையில், வீரர்களின் பாதுகாப்புதான் முக்கியம் என்றும் பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதேசமயம், மத்திய அரசு அனுமதியளித்தால், இந்திய அணி இலங்கை சென்று விளையாடுவதற்கு தயார் என்றுள்ளார் பிசிசிஐ பொருளாளர் அருண் துமால்.