உலகக்கோப்பை போட்டிக்கான முன்தயாரிப்பை சரியாக திட்டமிடாத காரணத்தினாலேயே முக்கியமான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைய நேரிட்டது என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கடந்த 2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, அணியில் விக்கெட் எடுக்கத்தக்க 2 நல்ல சுழற்பந்து வீச்சாளர்கள் தேவை என்ற முடிவு மேற்கொள்ளப்பட்டு, அதற்கேற்ப சாஹல் மற்றும் குல்தீப் ஆகியோர் தயார் செய்யப்பட்டனர்.

ஆனால், மிடில் ஆர்டர் விஷயத்தில் இந்திய அணி தொடர்ந்து அசட்டையாகவே இருந்தது. இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் தேர்வான தினேஷ் கார்த்திக் மற்றும் கேதார் ஜாதவ் ஆகியோரால் அணியைக் காப்பாற்ற முடியவில்லை. இங்கிலாந்து சூழலில் அவர்களால் நிலைத்து நின்று ஆடமுடியவில்லை.

இந்திய அணி உலகக்கோப்பை விஷயத்தில் மட்டுமே கோட்டைவிட்டு விடவில்லை. கடந்த 2 ஆண்டுகளாகவே மாற்று திட்டம் இல்லாமல்தான் இருந்து வந்திருக்கிறது. இந்த விஷயத்தில் அணி நிர்வாகமும் அசட்டையாக இருந்துள்ளது.

இனி, அடுத்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள உலகக்கோப்பை டி-20 போட்டிக்கு, இந்திய அணியை மிகச்சிறந்த முறையில் தயார்செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதற்கேற்ப அணி நிர்வாகம் சிறப்பான முறையில் திட்டமிட வேண்டுமென்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.