சிஏஏ-க்கு எதிரான போராட்டக்காரர்களை முக அங்கீகார தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அடையாளம் காணும் மத்தியஅரசு!

டெல்லி:

தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக தற்போது முக அங்கீகார முறையிலான (facial recognition) பயன்கள் அதிகரித்து வருகின்றன. இந்த  தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மத்தியஅரசு போராட்டங்களின்போது, போராட்டக்காரர்களை  கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக வடமாநிலங்களில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது தமிழகத்திலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

டெல்லி, உ பி. போன்ற மாநிலங்களில் நடைபெறும் சிஏஏ-க்கு எதிரான போராட்டத்தின்போது, போராட்டத்தை படம்பிடிக்கும் காவல்துறையினர், போராட்டத்தில் முன்னிலை வகிப்போரை,  ஃபேசியல் ரெக்ககனைசன் எனப்படும் முக அங்கீகார மென்பொருள் தொழில்நுட்பத்தைக் கொண்டு அடையாளம் கண்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பலருக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாகவே தற்போது பலர் தங்களது முகத்தை  மறைத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இதுகுறித்து விமர்சிக்கும் சமூக ஆர்வலர்கள்,  மோடி தலைமையிலான மத்திய அரசு, கருத்து வேறுபாடுகளை ஒடுக்கும் நோக்கில் இந்த புதிய தொழில்நுட்பத்தை கட்டுப்பாடு இல்லாமல் பயன்படுத்துகிறது, இது தவறான நடவடிக்கை என்று  குற்றம் சாட்டி உள்ளனர்.

இதுகுறித்து கூறிய போராட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவர்,  தனது முகத்தை படம்பிடித்த காவல்துறை யினர்,  “எனது தரவை அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை, இதன் காரணமாகவே தற்போது போராட்டத்தில் ஈடுபடும் பலர் தங்கள் முகங்களை மறைக்க மலிவான வழிகளைப் பின்பற்றி வருவதாகவும், பலர் தங்களது தாவணி மற்றும் சால்வைகளைக் கொண்டு முகத்தை மறைத்து வருகிறார்கள்…  “இந்த அரசாங்கம்  போராட்டக்காரர்களை ஒடுக்க நடுக்கும் நடவடிக்கையில் இருந்து, நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்து உள்ளார்.

ஆனால் முக அங்கீகாரம் குறித்த கவலைகள் தேவையற்றவை என்று காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.  டெல்லியின் குற்றப் பதிவு அலுவலக துணை போலீஸ் கமிஷனர் ராஜன் பகத் கூறுகையில், “போராட்டத்தை தூண்டி விடுபவர்களை மட்டுமே நாங்கள்  இலக்கு  வைத்து பிடிக்கிறோம்,. “எங்களிடம் எதிர்ப்பாளர்களின் தரவு எதுவும் இல்லை, அதை சேமிக்க நாங்கள் திட்டமிடவில்லை.” என்று மறுப்பு தெரிவித்து உள்ளார்.

போராட்டத்தின்போது, யாராவது ஒரு போலீஸ் அதிகாரி மீது கல் வீசினால், வீடியோ எடுத்து அவரை அடையாளம் காண அவருக்கு உரிமை இல்லையா? என்று கேள்வி எழுப்புகிறார்  இன்னெஃபு இணை நிறுவனர் தருண் விக்.

முக அங்கீகாரம் தொழில்நுட்பம்  220 மில்லியன் மக்கள் வசிக்கும் உத்தரபிரதேசத்தில் காவல்துறையினருக்கு பெரும் உதவியாக இருந்ததாக கடந்த மாதம் ஓய்வு பெற்ற  உ.பி. காவல்துறைத் தலைவர் ஓ பி சிங் தெரிவித்து உள்ளார். தவறான கைதுகளின் எண்ணிக்கையை குறைக்க தொழில்நுட்பம் உதவியது என்றும் கூறி உள்ளார்.

இந்த தொழில்நுட்பம் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.