இந்தியாவுக்கு திட்டு.. மோடிக்கு பாராட்டு’’ சர்ச்சைகளுடன் பறந்து வரும் ட்ரம்ப்..

முதன் முறையாக இந்தியா வருகிறார், அமெரிக்க அதிபர் ட்ரம்ப். மனைவி மெலனியாவும் உடன் வருகிறார்.
அமெரிக்காவில் இருந்து ’ஏர் போர்ஸ் ஒன்’ விமானத்தில் கிளம்பி நேராக திங்கள் கிழமை குஜராத் மாநிலம் அகமதாபாத் வருகிறார்.

இரண்டு நாட்கள் இந்தியாவில் பொழுது கழிக்க இருப்பதால் உள்ளூர் நிகழ்ச்சிகளில் ட்ரம்ப் ஏக பிஸி.
பொழுது கழிக்க இருப்பதால் என்று சொல்ல காரணம்-

அவரது இந்திய சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே எதிர்பார்த்த மாதிரி எந்த வணிக ஒப்பந்தமும் கையெழுத்தாகாது .
இதை அவரே சொல்லி விட்டார்.

;இந்தியாவுடன் வணிக ஒப்பந்தம் செய்வோம்.ஆனால் இந்த பயணத்தின் போது அல்ல. (அமெரிக்க அதிபர்) தேர்தலுக்கு முன்பே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகுமா? என்று தெரியவில்லை’’ என்று வாஷிங்டனில் உள்ள விமானப்படை தளத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ட்ரம்ப் தெளிவாக தெரிவித்துள்ளார்.

விமானத்தில் ஏறும் முன்பாக ‘’ இந்தியா அமெரிக்காவை நல்ல படியாக நடத்தவில்லை’என்று கொளுத்திப்போட்ட ட்ரம்ப்’’ ஆனால் மோடியை நான் மிகவும் விரும்புகிறேன்’’ என்று சொல்லி விட்டு விமானம் ஏறி பறந்து விட்டார்.

இந்திய பயணம் குறித்து ட்ரம்ப் பேட்டி அளிக்கும் ஒவ்வொரு முறையும் ‘எனக்கு அகமதாபாத்தில் 70 லட்சம் பேர் பேர் வரவேற்பு அளிக்க உள்ளனர்’ என்று சொல்லி வருகிறார்.

’’இவ்வளவு பேர் வருவாரக்ளா? என்று இந்திய தரப்பு அதிகாரிகளிடம் கேட்டபோது’ எண்ணிக்கையை விடுங்கள்..அதிபரை வரவேற்கும் எழுச்சியே முக்கியம்’ என்று பதில் அளித்தனர்.

லட்சக்கணக்கானோர் வருகிறார்களோ இல்லையோ-ட்ரம்ப் வரவேற்பு நிகழ்ச்சிக்கு -இந்தியாவின் பல்வேறு மாநில கலைஞர்களை கொண்டு ஏகப்பட்ட கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

-ஏழுமலை வெங்கடேசன்