இண்டிகோ விமான நிறுவன ஊழியர் கொரோனாவால் பலி : அரசு மவுனம்

மும்பை

ண்டிகோ விமான நிறுவன ஊழியர் ஒருவர் கொரோனாவால் மரணம் அடைந்தது குறித்து அரசு அறிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

நாடெங்கும் பரவி வரும் கொரோனாவால் இதுவரை 8000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 250 ஐ தாண்டி உள்ளது.  இதில் தமிழகத்தில் மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 11 ஆகி உள்ளது.

இந்நிலையில் தனியார் விமான போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தனது ஊழியர் ஒருவர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளதாக அறிவித்துள்ளது.  அவர் சென்னையைச் சேர்ந்தவர் எனவும் கடந்த வெள்ளிக்கிழமை அவர் மரணம் அடைந்துள்ளதாகவும் மட்டும் நிறுவனம் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

இது குறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத அந்நிறுவன அதிகாரி ஒருவர் மரணமடைந்தவர் தனது 50 வயதுகளின் இடையில் உள்ளவர் எனவும் அவர் பராமரிப்பு பொறியாளராகச் சென்னையில் கடந்த 2006 ஆம் வருடம் முதல் பணி புரிவதாகவும் தெரிவித்துள்ளார்.  இவர் நம் நாட்டில் கொரோனாவால் மரணம் அடைந்துள்ள முதல் விமான நிறுவன ஊழியர் ஆவார்.

ஆனால் இன்று வரை மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்த மரணம் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை எனக் கூறப்படுகிறது.