டில்லி

னியார் நிறுவனங்களிடம் இருந்து ரெயில்களை முழுவதுமாக வாங்க இந்திய ரெயில்வே உத்தேசித்துள்ளது.

இந்திய ரெயில்வே நாட்டில் மூன்று இடங்களில் ரெயில்களை உருவாக்கி வருகிறது. அவை தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள ஐசிஎஃப் எனப்படும் இணைப்பு பெட்டி தொழிற்சாலை, உத்திரப்பிரதேசத்தில் ரே பரேலியில் உள்ள மாடர்ன் கோச் தொழிற்சலை, மற்றும் பஞ்சாப் மாநிலம் கபுர்தலாவில் உள்ள ரெயில் கோச் தொழிற்சாலை ஆகியவைகள் ஆகும்.

இந்நிலையில் இந்த தொழிற்சாலைகளில் இல்லாமல் வெளியில் இருந்து முழுவதுமாக ரெயில்களை தயாரிக்கும் தனியாரிடம் இருந்து ரெயில்கள் வாங்க இந்திய ரெயில்வே உத்தேசித்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து மத்திய ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், ரெயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி. உயர் அதிகாரிகள், ரெயில் தயாரிக்கும் நிறுவனங்கள் ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழு கூட்டத்தில் விவாதிக்கபட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் முழுவதுமாக தயாரிக்கப்பட்ட மின்சார ரெயில்கள், மற்றும் மின்சார ரெயில் தொடர்கள் வாங்குவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அமைச்சர் அரசின் மேக் இன் இந்தியா என்னும் அடிப்படையில் இருந்து விலகாமல் அனைத்து கொள்முதலும் நடக்கும் என கூறி உள்ளதாக சொல்லப்படுகிறது.

இவ்வாறு தனியாரிடம் இருந்து முழுமையாக ரெயில்களை வாங்குவதால் ரெயில்வேயின் மூன்று தொழிற்சாலைகள் மற்றும் உதிரி பாக உற்பத்தி தொழில்கள் கடுமையாக பாதிக்கும் என தொழிலாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே தனியாரிடம் இருந்து டில்லி, மும்பை, சென்னை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரெயில்கள் வாங்கப்பட்டுள்ளன. டில்லி மெட்ரோ ஹுண்டாய் ரோடம் நிறுவனத்திடம் இருந்தும், மும்பை மெட்ரோ சிஆர் ஆர் சி நான்சிங் நிறுவனத்திடம் இருந்தும் சென்னை மெட்ரோ பிரான்ச் நாட்டின் ஆல்ஸ்தாம் நிறுவனத்திடம் இருந்தும் முழுமையாக ரெயில்களை வாங்கி உள்ளன.