புலம்பெயரும் மக்கள் – கொரோனாவின் பிடியில் சிக்கும் இந்திய கிராமப்புறங்கள்!

புதுடெல்லி: கொரோனா பரவல் காரணமாக, நகர்ப்புறங்களில் வாழ்ந்தவர்களில் பலர் தங்களின் சொந்த கிராமப்புறங்களை நோக்கி நகர்வதால், நாட்டில் புதிய கொரோனா தொற்று மையங்கள் உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில், கிட்டத்தட்ட 70% பேர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். கிராமப்புறங்களில் இருக்கும் மிகக்குறைந்த மருத்துவ வசதிகளால், அப்படி கொரோனாவை தொற்றிக்கொண்டு வரும் மக்களுக்கு சரியான சிகிச்சையளிக்க முடியாத நிலை நிலவுகிறது. இதனோடு சேர்ந்து பொருளாதார முடக்கமும் மக்களை வாட்டி வதைக்கிறது.

பொதுவாக, உத்திரப்பிரதேசம், பீகார், அஸ்ஸாம், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா மாநிலங்கள், அதிகளவு ஊர்திரும்பும் தொழிலாளர்களைப் பெறுகின்றன. எனவே, இந்த மாநிலங்களில் கொரோனா தொற்றியோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், ராஜஸ்தான் மற்றும் கர்நாடக மாநிலங்களின் கிராமப்புறங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போதைய நிலையில், இந்தியாவின் 112 கிராமப்புற மாவட்டங்களில், இதுவரை 98 மாவட்டங்களில் கொரோனா பரவியுள்ளது. முன்னதாக, 34 மாவட்டங்களில் மட்டுமே பரவியிருந்தது. இந்த மாவட்டங்களில், தற்போது புதிதாக 2250 நபர்கள் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், நாடு இப்படி பேராபத்தில் சிக்கிக் கொண்டிருக்கையில், இதை மோடியின் அரசு மிகவும் மோசமான முறையில் கையாண்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர்.