இன்றும் அனைவராலும் ஏற்கப்படும் பிரதமர் இந்திராகாந்தி மட்டுமே!! ஜனாதிபதி புகழாரம்

டெல்லி:

33 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பிரதமராக இந்திராகாந்தி விளங்குகிறார் என்று ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி தெரிவித்தார்.

‘‘இந்தியாவின் இந்திரா’’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி பேசுகையில், ‘‘ 20ம் நூற்றாண்டில் உலகளவில் யாராலும் மறக்க முடியாத நபராக இந்திரா விளங்கினார். உலகளவில் மட்டுமல்ல இந்திய மக்களிடமும் அந்த நிலையை தான் அவர் பெற்றிருந்தார்.

அவர் மறைந்த 1984ம் ஆண்டு முதல் தற்போது வரை இந்த நிலை தான் நீடிக்கிறது. மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு பிரதமர் அல்லது ஜனநாயக நாட்டின் பிரதமர் என்றுக் கூட வைத்துக் கொள்ளலாம்’’ என்றார்.

இந்திராவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா இந்த புத்தகத்தின் ஒரு ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. தீன் முர்த்தி பவனில் நடந்த இந்த விழாவில் துணை ஜனாதிபதி அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டு பிரனாப் முகர்ஜியின் உரையை கேட்டனர்.

மேலும், தங்க கோவிலில் நடந்த ‘ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்’ தொடர்பான பிரனாப்பின் பேச்சை மிகவும் ஆர்வமுடன் கேட்டறிந்தனர்.

இது தொடர்பாக பிரனாப் பேசுகையில்,‘‘ தங்க கோவில் உள்ளே மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைக்கு ஒரு அமைச்சராக நான் அஞ்சினேன்’’ என்றார். அவர் தொடர்ந்து பேசுகையில்,‘‘ அதன் விபரீதம் குறித்து இந்திரா அறியாதவர் என்று நினைத்திருந்தேன்.

ஆனால் அவர் அதை பற்றி நன்கு அறிந்திருந்தார். சமயங்களில் வரலாறு உண்மையை தாண்டி சில அதிரடி நடவடிக்கைகளை பதிவு செய்ய வேண்டி உள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்திராவின் கருத்து அந்த நேரத்தில் பொருத்தமானதாக இருந்தது’’ என்று தெரிவித்தார். இந்திராவின் அச்சமில்லா நடவடிக்கைக்கு இதை உதாரணமாக பிரனாப் தெரிவித்தார்.

‘‘1978ம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி காங்கிரஸ் கட்சி தலைவராக இந்திரா தேர்வு செய்யப்பட்டார். அதே மாதம் 20ம் தேதி கட்சியில் பணிக்குழு, நாடாளுமன்ற வாரியம், மற்றும் கட்சி நிர்வாகிகள் நியமனமும் செய்தார். அவர் பதவி ஏற்ற 2 மாதங்களில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது’’ என்று பிரனாப் பேசினார்.

இந்த விழாவில் சோனியாகாந்தியின் உரையை ராகுல்காந்தி வாசிக்கையில், ‘‘சுதந்திர பேராட்ட வெற்றியாளர்களிடம் இருந்து உன்னதமான மற்றும் தாராளமயமான செயல்பாடுகளை நான் கற்றுக் கொண்டேன்’’ என்று தெரிவித்தார்.