டில்லி,

நாடு முழுவதும் இன்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 33-வது நினைவு தினம் அணுசரிக்கப்பட்டு வருகிறது. அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிலையில் டில்லியில் உள்ள இந்திராகாந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் குடியரசு தலைவர்பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர்  அஞ்சலி செலுத்தினர்.

நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் மகளான இந்திரா காந்தி, நாட்டின் முதலாவது, ஒரே பெண் பிரதமர் எனும் பெருமையைப் பெற்றவர். கடந்த 1917ம் ஆண்டு, நவம்பர் 19-ந்தேதி பிறந்த இந்திரா காந்தி, 1966 முதல் 1977ம் ஆண்டுவரை பிரதமராகவும், அதன்பின் 1980ம் ஜனவரிமுதல் அவர் இறக்கும்வரை பிரதமராக இருந்தார்.

சீக்கியர்களின் பொற்கோயிலில் மறைந்திருந்த சீக்கிய தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுத்ததற்காக, அவரது சீக்கிய மெய்காப்பாளர் ஒருவரால் கடந்த 1984ம் ஆண்டு அக்டோபர் 31-ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவர் இறந்த 33வது நினைவுதினம் இன்று  அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் உள்ள ‘சக்தி ஸ்தலத்தில் மலர் தூவி ராகுல் காந்தி, முன்னாள்பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மோடி டுவிட்

பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “ முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினமான இன்று எனது அஞ்சலியையும், மரியாதையையும் தெரிவிக்கிறேன்’’ எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் டுவிட்

காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “ சக்திவாய்ந்த தலைவர், இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர், ஆயிரத்தில் ஒருவர் இந்திரா காந்தி. வீரமரணம் சிலவற்றோடு முடிந்துவிடுவதில்லை. இது தொடக்கம். இந்திரா காந்தியையும்,நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் அவர் செய்த தியாகத்தையும், செயலையும் நினைவு கூர்வோம்’’ என்று தெரிவித்துள்ளது.