டி.வி.எஸ். சோமு பக்கம்:
tvs-2
ப்போது நான், ப த்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். தஞ்சை தூயபேதுரு மேநிலைப்பள்ளி.
அது ஒரு மழைக்காலம்.  மாணவர்கள் எல்லோரும், வகுப்பறையில் ஜன்னல் வழியே மழையை ரசிக்க ஆரம்பித்து விட்டோம். பாடம் நடத்திக்கொண்டிருந்த அறிவியல் ஆசிரியர் ராஜ சமாதானம், அன்பானவரும்கூட.  மாணவர்களின் மனதறிந்து, பாடம் நடத்துவதை நிறுத்திவிட்டு, ஏதோ புத்தகமொன்றை தனக்குள் படிக்க ஆரம்பித்துவிட்டார். மாணவர்கள் அச்சம் நீங்கப் பெற்றவர்களாய்,  கசமுச என பேச ஆரம்பித்தபடியே மழையை ஜன்னல் வழியாக ரசித்திருந்தோம்.
அப்போதுதான் கையில் குடையுடன், மிகப்பதட்டமாக வந்தார் ஆங்கில ஆசிரியர் டேனியல். “தெரியுமா.. பிரதமர் இந்திராகாந்தியை சுட்டுட்டாங்களாம்.. பி.பி.சியில சொன்னான்!” என்றார் மூச்சிறைக்க.
டேனியல் சார் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். மிகஅறிவாளி. பள்ளி இடைநேரங்களில், காதில் பி.பி.சி. வைத்து கேட்பார்.
வகுப்பில் இருந்த ஆசிரியர் ராஜசமாதானம், “நெசமாவா” என்றார் அதிர்ச்சியுடன். மாணவர்களான எங்களுக்கும் அதிர்ச்சி.
தஞ்சைக்காரர்களான எங்களுக்கு  இந்திராகாந்தியும், எம்.ஜி.ஆரும் அப்போது மனதுக்கு மிக இணக்கமாயிருந்தார்கள்.
சிலமாதங்கள் முன்பாகத்தான், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் துவக்கப்பட்டிருந்தது. அதன் துவக்க விழாவுக்கு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரும், பிரதமர் இந்திரா காந்தியும் வருகை புரிந்தார்கள். விழாவின் ஒரு பகுதியாக தஞ்சை பெரியகோயிலுக்கு அவர்கள் வரப்போவதாக தகவல் தெரியவந்தது.
உடனே நானும் என் உயிர்நண்ர்களில் ஒருவனான சிராஜூதீனும் ( தற்போது, திருச்சி ஜமால் முகமது கல்லூரி பேராசிரியர்) ஆளுக்கொரு சைக்கிளை எடுத்துக்கொண்டு பெரிய கோயிலுக்கு விரைந்தோம்.
கோயிலுக்கு வெகுதூரம் முன்பே மக்கள் கூட்டம். பெரியார்சிலை அருகே இரு சைக்கிள்களையும் வைத்து பூட்டிவிட்டு, கோயில் நோக்கி நடந்தோம்.
tvs-1
கோயில் வாசல் வரை, மனிதர்களைப் புகுந்து கொண்டு நடந்தோம். வாசலுக்கு அருகே ஏதோ மரத்தினால் தடுப்பு ஏற்படுத்தி இருந்தார்கள். எப்படியோ அங்கே சென்றுவிட்டோம்.
சிறிது நேரத்தில் இந்திராகாந்தியும், எம்.ஜி.ஆரும் காரில் வந்திறங்கி கோயிலுக்குள் நடந்தார்கள். ஐம்பதடி தூரத்தில் அவர்களை பார்த்தது இப்போதைய பாதுகாப்பு கெடுபிடிகளை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.
மக்களை நோக்கி கையசத்தபடியே இருவரும் கோயிலுக்குள் சென்றார்கள்.
இந்திரா காந்தியின் அந்த தஞ்சை விஜயம், மக்களுக்கு அவரை மேலும் நெருக்கமாக்கியிருந்தது.
அவரது மறைவை டேனியல் சார் வந்து சொன்னதும் எல்லோருக்கும் மிக துக்கம்.
டேனியல் சார், “ஜனாதிபதி ஜைல்சிங் வெளிநாடு போயிருக்கிறார். அவர் வந்தபிறகுதான் மரணத்தை மத்திய அரசு அறிவிக்குமாம்” என்று உபதகவலையும் சொல்லிவிட்டுச் சென்றார்.
அடுத்த சில நிமிடங்களில் பள்ளி ஒலிபெருக்கியில், தலைமை ஆசிரியர் பேசினார்:
“எதிர்பாராத காரணத்தால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மாணவர்கள் பாதுகாப்புடன் வீட்டுக்குச் செல்லும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”
இதையே ஆங்கிலத்திலும் அடுத்து, சொல்வார். அதை கேட்க நாங்கள் வகுப்பறையில் இல்லை.
ஓடிவந்து, அவரவர் சைக்கிளை எடுத்தோம்.
அன்று மாலை..
நண்பன் சிராஜூதீன் எங்கள் வீட்டுக்கு வந்தான். “பஸ்ஸ்டாண்ட் வரைக்கும் ஒரு ரவுண்ட் போயிட்டு வருவோமா. எங்க பார்த்தாலும் பிரச்சினையா இருக்காமே” என்றான்.
 
ஆளுக்கொரு சைக்கிளில் கிளம்பினோம்.  உடன், சேகர், (தற்போது பிஸினஸ்மேன்), நந்தகுமார் (ஓய்வு பெற்ற ராணுவவீரர்) எல்லோருமாக சென்றோம்,
பழைய பேருந்து நிலையம் எதிரே நாங்கள் செல்வதற்குள், வழியெங்கும் மக்கள் சைக்கிள்களில் விரைந்தபடி இருந்தார்கள் .(அப்போது இருசக்கர எந்திர வாகனங்கள்குறைவு) கடைகள் சில அடைக்கப்பட்டிருக்க, மற்ற கடைகள் அடைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. டீகடை, பெட்டிக்கடை மட்டும் பாதி கதவு திறந்து வியாபாரம் நடத்திக்கொண்டிருந்தன.
பழைய பேருந்து நிலையம்அருகே வந்தஎங்கள் மாணவர் பட்டாளம், அங்கிருந்தபோலீஸ்பூத் அருகே சைக்கிள்களை நிறுத்தியது. காவல்துறையினர் யாரையும் பார்த்த நினைவில்லை.
பேருந்து நிலையத்தில் மக்கள், “இந்த பஸ் போகுமா, அந்தபோகுமா” என பதட்டத்துடன் விசாரித்து க்கொண்டிருந்தார்கள். வண்டியிலிருந்து இறங்கி நின்ற கண்டக்டர்களும், டிரைவர்களும், “பேருந்து எதுவும்போகாது” எனபதில் சொல்லியபடி இருந்தார்கள்.
அப்போது பேருந்து நிலையத்துக்கு எதிரே இருந்த சாந்தி புரோட்டா கடை (அது இன்றளவும் புகழ்பெற்று விளங்குகிறது.) அடைக்கப்பட்டிருந்தது. அதன் வாசலில் சிலர். .வெளியூர்வாசிகளாக இருக்கக்கூடும். பதைபதைத்து நின்றிந்தார்கள்.
அப்போது அண்ணாசிலை அருகிலிருந்து ஒருகும்பல் ஓங்கிக் குரல்கொடுத்தபடியே வந்தது. கையிலிருந்த கற்காளும் இலக்கின்றி எறிந்தபடி வந்தது. அந்த கும்பலில் சிலர், நீண்ட கம்புகளை கையில் வைத்து காற்றில் வீசியபடியே வந்து கொண்டிருந்தார்கள்.
அப்போது அந்த கும்பல் எரிந்த கற்களில் ஒன்று, எங்களுக்கு நேர் எதிரே சாந்தி புரோட்டா ஸ்டால் வாசலில் நின்றிருந்த ஒருவரின் தலையில்பட்டது .ரத்தம் பீறிட்டது பார்த்தோம். (?) கையில்கு ழந்தையுடன் இருந்த அவரதுமனைவி (?)ஓங்கி ஓலமிட்டார். அந்த குழந்தையும் கதறியது நினைவில் இருக்கிறது.சுற்றிலுமிருந்த கூட்டம் பயந்து சிதறியது.
என் அருகில் நின்றிந்த சிராஜூதீன், “டேய்..ஓடியாந்துடுடா” என கத்தியபடியே சைக்கிள் பாரில் ஏறிமிதித்தான்.
என் அடி வயிற்றுலும் ஏதோ உருண்டது நன்றாக நினைவிருக்கிறது. உயிர்பயமாக இருக்கக்கூடும்.
நானும் சைக்கிளை வேகவேகமாக மிதித்தேன்.
வீடு வந்த சேர்ந்த பிறகும் மனசு படபடவென அடித்துக்கொண்டது.
இப்போதும் மறக்க முடியாத சம்பவம் அது. இன்று அலைபேசிய சிராஜூதீன், சேகர் ஆகியோரும்கூட இந்த சம்பவத்தை மிகசோகத்துடன் நினைவு கூர்ந்தார்கள்.
கண்ணெதிரே ஒரு அப்பாவி, கல்லால் அடிபட்டு ரத்தம் வழிய கதறியதும்.. அவரது மனைவி குழந்தை அலறியதும் அப்படியே மனதில் தைத்திருக்கிறது.
அதைத்தடுக்காத.. குறைந்தபட்சம் அவர்களுக்கு உதவி செய்ய முனையாத பயந்த மனசு கழிவிரக்கத்தை ஏற்படுத்துகிறது.
எனக்குத்தோன்றுவது இதுதான்:
பாதகம் செய்பவரை கண்டால் மோதிமிதித்துவிட எல்லாம் வேண்டாம்.
ஓடி ஒளியாமல் நமக்கு ஆபத்தில்லாத வகையிலாவது அவர்களை சாந்தப்படுத்த முனையலாம்.