உள்ளாட்சித் தேர்தலில் தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல்: பணம் திரும்ப தருவதாக அதிமுக அறிவிப்பு

சென்னை:

மாநகராட்சி மேயர், நகர்மன்ற தலைவர் பதவிகளுக்கு விருப்பமனு அளித்தவர்கள், விரும்பினால் தங்களது  கட்டணத்தை திருப்பி வாங்கிக்கொள்ளலாம் என்று அதிமுக தலைமை அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் அடுத்த மாதம் இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கருதப்படும் நிலை யில், அனைத்துக்கட்சிகளும், விருப்பமனு விநியோகம் செய்து கல்லா கட்டி வருகின்றன.

இந்த நிலையில்,  மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர் ஆகியோரை மக்களால் தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்களே மறைமுகமாகத் தேர்ந்தெடுப்பார்கள் என அவசரச் சட்டத்தை அதிமுக அரசு நேற்று  கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டத்திற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்தநிலையில், மாநகராட்சி மேயர், நகர்மன்ற தலைவர் பதவிகளுக்கு விருப்பமனு அளித்தவர்களின் கட்டணம் திருப்பி வழங்கப்படுவதாகவும்,  அதிமுக பொதுக்குழு முடிந்தவுடன் விண்ணப் கட்டண தொகைக்கான அசல் ரசீதுக் காட்டி,  வரும் 25ஆம் தேதி முதல் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்து உள்ளது.

இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மேயர், நகர்மன்ற, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்கள், தாங்கள் சார்ந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட விரும்பினால், கட்சி மாவட்ட அலுவலகங்களில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, விருப்ப மனுக்களை பெற்று, உரிய கட்டணத்துடன் விண்ணப்பிக்கலாம்.

மேலும்,  மேயர், நகர்மன்ற தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறுவதால், அந்தந்த பதவிகளில் போட்டியிட ஏற்கெனவே  விருப்ப மனு அளித்தவர்கள், வருகிற 25 முதல் 29ஆம் தேதி வரையில், தங்கள் விண்ணப்ப கட்டணங்களை, தலைமை கழகத்திற்கு நேரில் வந்து திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.