40 தொகுதிகளிலும் தனித்து போட்டி: நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்

சென்னை:

லோக்சபா தேர்தலில் நாம் தமிழ்ர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என சீமான் தெரிவித்து உள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து அரசியல் கட்சிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வரும் நிலையில், திமுக, அதிமுக கூட்டணியில் கட்சிகள் சேர்வது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட தீர்மானித்து இருப்பதாக  அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது உறுதி. 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களையும், 20 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களையும் நிறுத்த  இருக்கிறோம் என்றார்.

மேலும்,மத்திய அரசு தற்போது தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் உள்ள சலுகைகளை கடந்த 4 ஆண்டுகளாக ஏன் தாக்கல் செய்யவில்லை? விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் தருவதாக கூறி உள்ளனர். இந்த அறிவிப்பு எப்போது செயலாக்கம் பெறும்? என்று கேள்வி எழுப்பிய சீமான்,  மத்திய அரசு தவறான அணுகுமுறையை பின்பற்றுகிறது என்று குற்றம் சாட்டினார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.), நீட் தேர்வு உள்ளிட்ட அனைத்திலும் மத்திய அரசு பெரும் தோல்வியை சந்தித்தது. மத்திய அரசிடம், தமிழக அரசு தனது உரிமைகள் அனைத்தையும் கொடுத்துவிட்டது என்றவர்,  தமிழகத்தில் முதலமைச்சர் என்பவர் பெயரளவுக்கு மட்டுமே உள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை போன்ற துணிச்சல் நமது மாநில முதல்வருக்கு இல்லையே என்ற வருத்தம் தான் உள்ளது.

இவ்வாறு சீமான் கூறினார்.

3 thoughts on “40 தொகுதிகளிலும் தனித்து போட்டி: நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்

Leave a Reply

Your email address will not be published.