புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து: கவர்னர் கிரண்பேடி மறைமுக எதிர்ப்பு

--

புதுச்சேரி:

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கோருவதை மக்கள் விரும்பவில்லை என்று கவர்னர் கிரண்பேடி மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக அங்குள்ள அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றன.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரில், புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, இதுகுறித்து, அனைத்து எம்எல்ஏக்களும் டில்லி சென்று பிரதமர், குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர், துணை குடியரசுத் தலைவர், அனைத்துக் கட்சித் தலைவர்களை சந்திப்பது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, புதுவை முதல்வர் நாராயணசாமி தலைமையில் அனைத்துக்கட்சி குழுவினர் டில்லி சென்றுள்ளனர். டில்லியில் குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்களை சந்தித்து, தனி மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து, புதுவைக்கு மாநில அந்தஸ்து தரும் சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இயற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகவும், இதுகுறித்து . சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பதாக அவர் உறுதியளித்தார் என்றும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.

புதுச்சேரி மாநிலத்துக்கு  தனி மாநில அந்தஸ்து வழங்கினால், கவர்னரின் அதிகாரம் செல்லாக்காசாகி விடும் என்ற நோக்கில் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி, புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்குவதை காரைக்கால், ஏனாம் பகுதி மக்கள் விரும்பவில்லை என்று மக்கள் மீது பழி போட்டுள்ளார்.

மேலும், தனி மாநில அந்தஸ்து குறித்து நாடாளுமன்றத்தில்தான் முடிவெடுக்க முடியும் என்று கூறிய கிரண்பேடி, பாஜக நியமன எம்எல்ஏக்களை சட்டமன்றத்திற்குள் அனுமதிக்காவிடில், சட்டச்சிக்கல் ஏற்படும் என்றும் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.