சென்னை: தமிழகத்தில் பொதுஇடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடவோ, ஊர்வலம் நடத்தவோ தமிழகஅரசு தடை விதித்துள்ள நிலையில், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தனிநபராக சிலைகளை எடுத்து சென்று அருகில் உள்ள நீர்நிலைகளிலோ கரைக்கலாம் என்று சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆண்டு விநாயகர் சதூர்த்திக்கு, பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும், விநாயகர் ஊர்வலம் நடத்வும்  தமிழக அரசு தடை விதித்துள்ளது.

அரசின் தடை உத்தரவை எதிர்த்து, பாஜக, இந்து அமைப்புகள்  சார்பில்,  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின்போது,  விநாயகர் சதுர்த்தி ஆண்டாண்டு காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்களின் உணர்வுபூர்வமான விஷயமாக இருக்கிறது. அரசு இந்த விவகாரத்தில் ஏதேனும் தளர்வுகள் அறிவிக்க வாய்ப்புள்ளதா? என நீதிபதிகள் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதலளித்த அரசு தரப்பு, பொதுஇடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடவும், ஊர்வலம் நடத்தவும் தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனி நபர்கள் செல்ல எந்த தடையும் விதிக்கவில்லை. வழிபாடு நடத்துவதை தடை செய்ய வேண்டும் என்பது அரசின் எண்ணம்மல்ல என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தனிநபர்கள் வீட்டில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலையை, அருகில் உள்ள கோயில்களுக்கு வெளியேவோ, அல்லது தனிநபராக சிலைகளை எடுத்து சென்று அருகில் உள்ள நீர்நிலைகளிலோ கரைக்கலாம். சென்னையில் மெரினா கடற்கரையை தவிர்த்து பிற நீர்நிலைகளில் சிலைகளை கரைக்கலாம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனினும், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவும், ஊர்வலம் நடத்தவும் விதித்த தடையை தளர்த்த இயலாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், இவை அனைத்தும் அரசின் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்குள் அடங்கும். மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.