டில்லி

ந்திய சீன பிரச்சினைகளை அதிகாரிகள் மற்றும் ராணுவ மட்டத்தில் பேசி தீர்வு காண உள்ளதாக அமெரிக்க அதிபருக்கு இந்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவும் சீனாவும் எல்லை பாதுகாப்புக்காக இதுவரை சுமார் 5 ஒப்பந்தங்கள் செய்துள்ளன.   ஆயினும் சீனா எல்லைப் பகுதியில் ராணுவத்தைக் குவிப்பதும் பதிலுக்கு இந்தியாவும் ராணுவத்தை அனுப்புவதும் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.  தற்போது சீனா மீண்டும் தனது ராணுவப்படைகளைக் குவித்துள்ளது.  அதையொட்டி இந்தியாவும் படைகளைக் குவித்ததால் உலக நாடுகளிடையே பரபரப்பு ஏற்பட்டது

இந்நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது ராணுவத்தினர் கவனத்துடனும் எந்த நேரத்திலும் போர் புரியத் தயாராகவும் இருக்க வேண்டும் என அறிவித்தார்.  இதனால் அவசியம் போர் மூளக்கூடும் எனச் செய்திகள் பரவின.  இந்நிலையில் இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி  சந்தித்துப் பேசியதாக வெளி வந்த தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று இந்தியா மற்றும் சீனா இடையில் உள்ள எல்லைப் பிரச்சினையைத் தீர்க்க தாம் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிர்மப்  தெரிவித்தார்.  இதற்கு இந்திய வெளியுறவுத் துறை ராணுவ செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சா பதில் அளித்துள்ளார்.

அவர் தமது பதிலில் ”இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே அதிகாரிகள் மற்றும் ராணுவ மட்டத்தில் பேச்சு வார்த்தைகள் நடந்துக் கொண்டுள்ளன.  எனவே இந்த பேச்சு வார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியும்.  தற்போது எல்லையில் நிலைமை மோசமாக இல்லை.   எனவே யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.  இரு நாட்டுப் பேச்சு வார்த்தைகள் மூலம் மட்டும் நிச்சயம் ஒரு தீர்வை அடைய முடியும்.

இந்தியா தனது எல்லைப் புறத்தில் சீனாவுடன் அமைதியான உறவை தொடர விரும்புகிறது.   அதையே நமது தலைவர்கள் சொற்படி ராணுவத்தினர் பின்பற்றி வருகின்றனர். அதே வேளையில் இந்தியா தனது தேசிய பாதுகாப்பு மற்றும் தனித்தன்மையில் எவ்வித சமரசமும் செய்துக் கொள்ளாது.” என அமெரிக்காவின் மத்தியஸ்த யோசனைக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.