மாண்டரின் மொழியைக் கற்கும் இந்திய ராணுவப் படையினர்!

புதுடெல்லி: சீன ராணுவத்துடன் எல்லைப் பிரச்சினை ஏற்பட்டால், அதை எளிதாக சமாளிக்கும் வகையில் சீனாவின் மாண்டரின் மொழியை, இந்தோ-திபெத் படையினர் கற்கத் துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது; கடந்த சில மாதங்களாக மக்கள் விடுதலை ராணுவம் என்றழைக்கப்படும் சீன ராணுவம், எல்லையில் பிரச்சினையை உருவாக்கி வருகிறது.

சீன ராணுவத்தின் தொந்தரவை சமாளிக்கும் வகையில், இந்தோ-திபெத் (ஐடிபிபி) போலீஸ் படைப் பிரிவை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு, சீன மொழியான மாண்டரின் மொழி கற்று தரப்படுகிறது. இந்த முயற்சி, தகவல்-தொடர்பு இடைவெளியைக் குறைக்க உதவியாக இருக்கும். மேலும், சிக்கலான நேரங்களில் நிலைமையை சமாளிக்க உதவும்.

லடாக் பகுதியை சேர்ந்த கால்வான் சம்பவத்திற்கு பின்னர், எல்லைப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள படைகளில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.