ஜகார்தா: இந்தோனேசியாவின் ஜகார்தா விமான நிலையத்தில் இருந்து 62 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் அடுத்த 4 நிமிடத்தில், தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமான நிலையில், அந்த விமானம் ஜாவா கடலில் விழுந்தது என்றும், அதிபர் ஜோகோ விடோடோ  அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து 56 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 62 பேருடன் புறப்பட்ட ஸ்ரீவிஜியா எஸ்.ஜே .182 (Sriwijaya  SJ182)  மாடல் விமானம், அடுத்த 4 நிமிடத்தில் சுமார் 10ஆயிரம் அடி உயரத்துக்கு  ஜாவா கடலுக்கு மேலே பறக்கும் போது ரேடாருடனான தொடர்பை இழந்ததாக கூறப்பட்டது.

இதையடுத்து,  மாயமான விமானத்தை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வந்தனர். அப்போது, கடலில் இருந்து சில விமான பாகங்கள், பயணிகள் உடல்களை மீட்பு படையினர் கண்டெடுத்தனர். பின்னர் விமானத்தின் கருப்புபெட்டியும் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாயின.

இந்த நிலையில்,  மாயமான விமானம் ஜாவா கடலில் விழுந்து நொறுங்கியது- இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.  விமான விபத்து குறித்து போக்குவரத்து அமைச்சகம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் விமானம் நொறுங்கி விழுந்ததை இந்தோனேசிய அதிபர் உறுதி செய்துள்ளார்.