இந்தோனேசியா: கடலில் மிதக்கும் உடல்கள் – சுனாமி பாதிப்பால் உயரிழந்தோரின் எண்ணிக்கை 832 ஆக உயர்வு

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் நேற்று முன்தினம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி அலைகள் தாக்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 832 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

INDONESIA

உலகில் நிலநடுக்கம் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் இந்தோனேசியாவும் ஒன்று. கடற்கரையை ஒட்டிய இந்தோனேசிய தீவுகளில் நிலநடுக்கமும் சுனாமியும் அடிக்கடி நிகழ்கிறது. கடந்த ஜூலை மாதம் லம்போக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 550-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். 2004-ம் ஆண்டு சுமத்ரா தீவுக்கருகே ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் (ரிக்டரில் 9.1) இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடு களை சுனாமி தாக்கியது. இதனால் இந்தோனேசியாவைச் சேர்ந்த 1.68 லட்சம் பேர் உட்பட மொத்தம் 2.2 லட்சம் பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கி பெரும் பாதிப்பை ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் வடக்கு பகுதியில் உள்ள சுலவேசி தீவு சுற்றுலா தலமாக விளங்குகிறது. இந்த தீவின் தலைநகரான பலுவில் சுமார் 3.8 லட்சம் பேர் வசிக்கின்றனர். சுற்றுலாப் பயணிகளும் இங்கு வருவது வழக்கம். நேற்று முன்தினம் மாலையில் கடற்கரை திருவிழாவை கொண்டாடுவதற்காக பொதுமக்கள் கடற்கரைக்கு சென்ற வண்ணம் இருந்தனர். அப்போது மாலை 3 மணி அளவில் இந்த தீவின் கடல் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பின்னர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. பலு நகரிலிருந்து 80 கி.மீ. தூரத்தில், 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோளில் 7.5 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அதன் பிறகு மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதையடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், சிறிது நேரத்தில் அந்த எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது. ஆனால், சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்ட சிறிது நேரத்தில் பலு நகர கடலோரப் பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்கின. சுமார் 3 மீட்டர் உயரத்துக்கு ஆர்ப்பரித்து எழுந்த அலைகள் கரையை நோக்கி பாய்ந்து வந்து தாக்கின.

நிலநடுக்கம் காரணமாக பலு நகரில் இருந்த குடியிருப்பு கட்டிடங்கள், ஒரு மசூதி உள்ளிட்டவை இடிந்து விழுந்தன. ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் சேதமடைந்தன. முக்கிய பாலம் ஒன்றும் இடிந்து விழுந்தது. நிலநடுக்கத்தை உணர்ந்த பலர் கட்டிடங்களை விட்டு வெளியில் ஓடிவந்தனர். எனினும், பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். கடற்கரையில் கூடியிருந்தவர்கள் மற்றும் வீடுகளில் இருந்த பலர் ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்த வாகனங்களும் இழுத்துச் செல்லப்பட்டன. இதனால் அப்பகுதி முழுவதும் போர்க்களம் போல காட்சி அளிக்கிறது.

இதையடுத்து, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும், ராணுவ வீரர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடற்கரையில் ஏராளமான உடல்கள் கரை ஒதுங்கி வருகின்றன. இதுவரை 832 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் பலர் காணாமல் போயுள்ள நிலையில் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இடிபாடுகள் மற்றும் சுனாமியில் சிக்கி காயமடைந்த 1000-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் திறந்த வெளியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நிலநடுக்கம் காரணமாக வீடுகளை இழந்தவர்கள் திறந்த வெளி முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். சுனாமி தாக்குதலைத் தொடர்ந்து பலு நகரில் உள்ள விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக மின் இணைப்பும், தகவல் தொடர்பும் முற்றிலும் துண்டிக்கப் பட்டுள்ளது. அனைத்து சாலைகளும் சேதமடைந்துள்ளதால் மீட்புப் பணிகள் தாமதமாக நடைபெறுகின்றன.