ஊரடங்கு முடிந்தவுடன் ‘இன்று நேற்று நாளை 2’ பணிகள் தொடக்கம்….!

2015-ம் ஆண்டு வெளியான படம் ‘இன்று நேற்று நாளை’. பெரும் வரவேற்பு பெற்ற இந்தப் படத்தின்

2-ம் பாகம் உருவாகவுள்ளதாகவும், ஆர்.ரவிக்குமார் இந்தப் படத்துக்குக் கதை, திரைக்கதை,வசனம் எழுத, அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த எஸ்.பி.கார்த்திக் இயக்கவுள்ளார் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. விஷ்ணு விஷால் மற்றும் கருணாகரன் ஆகியோர் இதிலும் நடிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சமீபத்தில் எந்தப் படத்தின் 2-ம் பாகத்தை காண ஆவலாக இருக்கிறீர்கள் என்று திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் வாக்கெடுப்பு நடத்தியது.

அதில் ‘சூது கவ்வும் 2’, ‘தெகிடி 2’ மற்றும் ‘மாயவன் 2’ இடம்பெற்றிருந்தன. ஆனால் ஒரு ரசிகர் “எங்களுக்கு ‘இன்று நேற்று நாளை 2’ வேண்டும்” என்று தெரிவித்தார்.

அவருக்குப் பதிலளிக்கும் விதமாக திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பதிவில், ” ‘இன்று நேற்று நாளை 2’ கதைப்பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. ஊரடங்கு முடிந்தவுடன் முதற்கட்டப் பணிகள் தொடங்கப்படும்” என்று பதிலளித்துள்ளது.