டில்லி:

உச்சநீதிமன்ற வரலாற்றில் 7வது பெண் நீதிபதியாக மூத்த வக்கீல் இந்து மல்கோத்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். வக்கீலாக இருந்த பெண் ஒருவர் நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்படுவது இதுவே முதன்முறையாகும்.

கடந்த 3 ஆண்டுகளாக ஒரே ஒரு பெண் நீதிபதியான பானுமதியுடன் உச்சநீதிமன்றம் செயல்பட்டு வந்தது. 2014ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் என்ற பெண் நீதிபதி ஓய்வு பெற்றார். மல்கோத்ராவுக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்று பதவி பிரமாணம் செய்துவைத்தார். இந்த புதிய நியமனங்கள் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது.

நீதிபதி மல்கோத்ரா டில்லி சட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். முன்னதாக இவர் ஸ்ரீராம் கல்லூரியில் பொலிடிக்கல் சயின்ஸில் பி.ஏ. ஹானர்ஸ் பட்டம் பெற்றார். 1983ம் ஆண்டு சட்டப் பணியை தொடங்கினார். உச்சநீதிமன்றத்தில் மிக விரைவில் வக்கீலாக பணியை தொடங்கி சாதனை படைத்தார்.

மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகள் தொடர்பான வழக்கில் அதிகம் ஆஜராகி வாதாடியுள்ளார். மும்பை பங்கு சந்தை, டில்லி வளர்ச்சி ஆணையம். அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி குழுமம், வேளாண் ஆராய்ச்சி குழுமம் ஆகியவற்றின் வக்கீலாகவும் பணியாற்றியுள்ளார்.

பாலியல் துன்புறுத்தல் புகார் தொடர்பான 10 பேர் கொண்ட விசாரணை குழுவில் இவர் உறுப்பினராக இருந்தார். 2007ம் ஆண்டு மூத்த வக்கீலாக உச்சநீதிமன்றத்தால் அங்கிகரிக்கப்பட்டார். இது கடந்த 30 ஆண்டுகளில் 2வது முறையாக ஒரு பெண்ணுக்கு இந்த அங்கிகாரம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.