டில்லி

சிந்து சமவெளி நாகரீக காலத்தில் கிடைத்த மண்பாண்டங்களில் உள்ள மாமிசங்களின் மிச்சங்கள் கிடைத்துள்ள்தால் அப்போது மாமிசம் உண்ணப்பட்டிருந்தது தெரிய  வந்துள்ளது.

இந்தியாவில் மிகப் பழைய நாகரீகமாகக் கருதப்படுவது சிந்து சமவெளி நாகரீகம் ஆகும்.  இந்த கால கட்டம் வேத காலம் என அழைக்கப்படுகின்றது.   தற்போது பாஜகவினர் வேத காலத்தில் மாமிசம் உண்ணும் பழக்கம் இருந்ததில்லை எனக் கூறி வருகின்றனர்.  இதன் அடிப்படையில் பல மாநிலங்களில் மாட்டிறைச்சி போன்ற உணவுகள் தடை செய்யப்பட்டு வருகின்றன.

சமீபத்திய ஆய்வு மூலம் பாஜகவின் இந்த கூற்று தவறானது எனத் தெரிய வந்துள்ளது.   சுமார் 41600 வருடங்களுக்கு முந்தைய மண் பாண்டங்கள், விலங்குகளின் எலும்புகள் உள்ளிட்டவை சமீபத்தில் அரியானா மற்றும் உத்தரப்பிரதேச பகுதியில் கிடைத்துள்ளன.  இந்த எலும்புகளை ஆய்வு செய்ததன் மூலம் இங்கு ஆடு, மாடு, எருமைகள் வசித்துள்ளது தெரிய வந்துள்ளது.   அதிக அளவில் மாட்டு எலும்புகள் இருந்ததால் மாட்டிறைச்சி உண்ணப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.

இதையொட்டி அங்கிருந்த மண் பாண்டங்கள் ரசாயன ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.  இந்த ஆய்வின் கண்டுபிடிப்புக்களை கேம்பிரிட்ஜ் மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகங்கள் இணைந்து அகழாய்வு குறித்த ஒரு பத்திரிகையில் வெளியிட்டுள்ளன.  இந்த ஆய்வில் அகழாய்ச்சியில் கிடைத்த மண் பாண்டங்களில் ஒட்டிக் கொண்டிருந்த மிச்சங்கள் மிருகங்களின் மாமிசங்கள் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ள அக்‌ஷேதா சூரியநாராயணன், “நாங்கள் சிந்து சமவெளியில் கிடைத்த மண் பாண்டங்களில் உள்ள மிச்சத்தை ஆய்வு செய்ததில் அதில் மாமிசங்கள் இருந்தது தெரிய வந்துள்ளது.  இந்த மாமிசங்கள் பன்றி, ஆடு மாடுகள் அல்லது எருமை, உள்ளிட்டவற்றுடையதாக இருக்க வாய்ப்புள்ளது.   இந்த கண்டுபிடிப்பு பாத்திரங்களால் உறிஞ்சப்பட்டிருந்த எண்ணெய்யை ஆய்வு செய்ததன் மூலம் மேலும் நிரூபணம் ஆகி உள்ளது.

இவ்வாறு எண்ணெய்யில் கலந்துள்ள பொருட்கள் என்பது மண்ணால் அதிக அளவில் அரிக்கப்படுவதில்லை.   இது அந்த பகுதி மக்களின் உணவுப்பழக்கத்தை தெரிந்துக் கொள்ள மிகவும் பயனளிக்கிறது.  ஆயினும் தெற்கு ஆசியாவில் ஒரு சில இடங்களில் கிடைத்த மண் பாண்டங்களில் மட்டுமே இந்த எண்ணெய் இருந்துள்ளது.  இந்த பகுதிகளில் அதிகமாகக் கால்நடை எலும்புகள் கிடைப்பதால் அவை இறைச்சிக்காக மட்டுமின்றி பால் பொருட்களுக்காகவும் வளர்க்கப்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது” எனத் தெரிவித்துள்ளார்..